
பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் அறிவிப்பு!
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA), உள்நாட்டில் தயாரிக்கப்படும் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான (PET Bottles) புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விலை நிர்ணயம் இன்று (10) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டம் இலக்கம் 09 of 2003 இன் பிரிவு 20(5) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உற்பத்தியாளர்கள், பொதியிடுபவர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் பாட்டில் குடிநீரை விற்பனை செய்யவோ, காட்சிப்படுத்தவோ அல்லது விற்பனைக்கு வழங்கவோ முடியாது.
மேலும், 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2430/15 இன் கீழ் வெளியிடப்பட்ட முந்தைய விலை நிர்ணய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் CAA தெரிவித்துள்ளது.
புதிய அதிகபட்ச சில்லறை விலைகள்
| குடிநீர் அளவு | அதிகபட்ச சில்லறை விலை |
|---|---|
| 500 மில்லிலிட்டர் – 999 மில்லிலிட்டர் | ரூ. 80 |
| 1 லிட்டர் – 1.499 லிட்டர் | ரூ. 120 |
| 1.5 லிட்டர் – 1.999 லிட்டர் | ரூ. 150 |
| 2 லிட்டர் – 2.499 லிட்டர் | ரூ. 180 |
| 5 லிட்டர் – 6.999 லிட்டர் | ரூ. 400 |
புதிய விலை திருத்தத்தின்படி, 500 மில்லிலிட்டர் முதல் 999 மில்லிலிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களின் விலை ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 1 லிட்டர் முதல் 1.499 லிட்டர், 1.5 லிட்டர் முதல் 1.999 லிட்டர் மற்றும் 2 லிட்டர் முதல் 2.499 லிட்டர் வரையிலான பாட்டில்களின் அதிகபட்ச விலை தலா ரூ.20 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 லிட்டர் முதல் 6.999 லிட்டர் வரையிலான குடிநீர் பாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை நிர்ணயத்தை மீறி அதிக விலையில் குடிநீர் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் நோக்கில் நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் திடீர் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை எச்சரித்துள்ளது.



