
இலங்கையின் தொழிலாளர் சந்தையை மாற்றும் செயற்கை நுண்ணறிவு
இலங்கையின் வேலைவாய்ப்பில் உள்ள மக்களில் சுமார் 22.8 சதவீதம் பேர் தற்போது Generative Artificial Intelligence (AI) தொழில்நுட்பத்தின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (International Labour Conference – ILC) 114வது அமர்வின் பொதுச் சபையில் உரையாற்றியபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மனித தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்புக்கும் இடையிலான போட்டியாக பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இலங்கை இதனை வேறுபட்ட அணுகுமுறையில் பார்க்கின்றதாகவும், உற்பத்தி முறைகளை மாற்றியமைத்து உற்பத்தித்திறன் மற்றும் அனைவருக்கும் பகிரப்பட்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் கருவியாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் கொள்கை ஆய்வு நிறுவனம் (Institute of Policy Studies) சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வு முறைகளை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நாட்டின் வேலைவாய்ப்பில் உள்ளவர்களில் சுமார் 22.8 சதவீதம் பேர் Generative AI தாக்கத்திற்கு உட்படக்கூடியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில்முறை மற்றும் அலுவலக அடிப்படையிலான பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பாரம்பரியமாக சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வேலைவாய்ப்புகளாக கருதப்பட்ட துறைகளாகும்.
அதேவேளை, விவசாயம், கைவினைத்துறை மற்றும் ஒழுங்கற்ற தொழிலாளர் துறைகள் தற்போது குறைந்தளவு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைப்பது மற்றும் அதன் பயன்பாட்டை வேகப்படுத்துவது ஆகிய மூன்று அடிப்படைகளில் இலங்கையின் திட்டம் அமைந்துள்ளதாகவும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் முக்கிய தேசிய முன்னுரிமையாக டிஜிட்டல் மாற்றம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தவும், டிஜிட்டல் திறன்களைக் கொண்ட தொழிலாளர் படையை உருவாக்கவும் அரசாங்கம் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருவதாகவும், அதே நேரத்தில் சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தொழிலாளர் பாதுகாப்பையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில் விரிவான தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக நிபுணர் குழுவொன்று தற்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பொருளாதார மற்றும் எரிசக்தி சவால்களை அண்மையில் எதிர்கொண்ட இலங்கை, மக்களின் நலனை மையமாகக் கொண்டு வெளிப்படையான பொருளாதார முகாமைத்துவத்தை தொடர்வதாகவும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ச்சியின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க சர்வதேச ஒத்துழைப்பை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


