
15 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு தடை: UAE புதிய சட்டம்
சமூக ஊடக பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 15 ஆக நிர்ணயித்து, புதிய விதிமுறைகளை அமல்படுத்திய முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மாறியுள்ளது.
குழந்தைகளின் மனநலம், இணைய பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த புதிய தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை உருவாக்கவோ, பயன்படுத்தவோ அல்லது நிர்வகிக்கவோ முடியாது.
மேலும், அவர்கள் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுதல், கருத்து தெரிவிப்பு, உள்ளடக்கங்களை பகிர்வு செய்தல் அல்லது பொதுக் குழுக்களில் இணைதல் போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 மற்றும் 16 வயதினருக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
15 மற்றும் 16 வயதுடைய இளைஞர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். எனினும், அவர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

அதில் வயதுக்கேற்ற உள்ளடக்க கட்டுப்பாடுகள், அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்ளும் வசதிக்கு வரம்புகள், திரை நேர மேலாண்மை கருவிகள் மற்றும் பெற்றோர் கண்காணிப்பு அம்சங்கள் அடங்கும்.
சமூக ஊடக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
UAE-யில் செயல்படும் அனைத்து சமூக ஊடக தளங்களும் வயது சரிபார்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வயதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், பயனர்கள் தாங்களே வயதை அறிவிப்பது செல்லுபடியாகாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 வயதிற்குக் குறைவானவர்களின் கணக்குகளை முடக்குதல், வயது சரிபார்ப்பு முறைகளை ஏமாற்றி பயன்படுத்துவதைத் தடுப்பது மற்றும் குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளை விளம்பர நோக்கங்களுக்காக பயன்படுத்தாதிருப்பது போன்ற விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைகள் பாதுகாப்பே நோக்கம்
குழந்தைகள் பொருத்தமற்ற உள்ளடக்கங்களுக்கு ஆளாகுதல், பாதுகாப்பற்ற இணைய தொடர்புகள், சமூக ஊடகங்களுக்கு அடிமையாகும் நிலை மற்றும் தனிப்பட்ட தகவல் சேகரிப்பு போன்ற அபாயங்களை குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என UAE அரசு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளுக்கு இணங்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் இணைய பாதுகாப்பை வலுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போவதாக UAE அரசு குறிப்பிட்டுள்ளது.



