ஆயுர்வேத மருத்துவ சேவையில் 303 பேர் நியமனம்
இலங்கையின் ஆயுர்வேத மருத்துவ சேவையில் 303 பட்டதாரிகள் நியமனம்
சமூக சுகாதார மருத்துவர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய நியமனம்
இலங்கையின் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ துறையை வலுப்படுத்தும் நோக்கில் சமூக சுகாதார மருத்துவர்கள் உட்பட மொத்தம் 303 பட்டதாரிகள் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் நாளை (03) நியமிக்கப்படுகின்றனர்.
இந்த நியமன விழா சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரான டாக்டர் நலிந்த ஜயதிச அவர்களின் தலைமையில் கொழும்பு மாவட்ட செயலக அரங்கில் நடைபெற உள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டிற்கு பிறகு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான இதுவே மிகப்பெரிய ஒரே தொகுதி நியமனமாகும்.
நாட்டின் ஆயுர்வேத சேவைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், நோயாளி பராமரிப்பின் தரத்தை உயர்த்தவும், மேலும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையில் உள்ள ஆரம்ப நிலை மருத்துவ அலுவலர் (Primary Grade Medical Officer - PGMO) பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்பவும் இந்த நியமனங்கள் டாக்டர் நலிந்த ஜயதிச அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நியமனம் பெறும் பட்டதாரிகள் மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபை ஆயுர்வேத மருத்துவமனைகளில், ஆயுர்வேத நிபுணர்கள் மற்றும் அனுபவமிக்க மருத்துவர்களின் மேற்பார்வையில் ஒரு ஆண்டு காலம் முழுமையான பயிற்சி பெற்றுள்ளனர்.
சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்ததாவது, புதியதாக நியமிக்கப்படும் மருத்துவ அலுவலர்கள் வருங்காலத்தில் மத்திய அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் பிற மாகாண நிறுவனங்களின் கீழ் செயல்படும் ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
அதேபோல், நாட்டில் பரவும் தொற்றுநோய்கள் மற்றும் தொற்றில்லாத நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதற்காகவும், சிறுநீரக நோய்கள் அதிகம் காணப்படும் பகுதிகளுக்கு ஆயுர்வேத மருத்துவர்களை அனுப்பி சுகாதார சேவையை விரிவுபடுத்தவும் ஆயுர்வேத திணைக்களம் புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|