பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
பிலிப்பைன்சில் மீண்டும் நிலநடுக்கம் – பலத்த அதிர்வில் மக்கள் அச்சம்
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் இன்று (அக்டோபர் 17) ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவிலான பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் (USGS) தெரிவித்துள்ளது.
இதற்கு ஒரு வாரத்திற்கு முன் அந்நாட்டில் இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது உயிர்ச்சேதம் அல்லது சொத்துச்சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என மாகாண மீட்புப் பிரிவு அதிகாரி ரால்ஃப் கடலேனா தெரிவித்தார். “திடீரென ஒரு பலமான அதிர்வு உணர்ந்தோம், ஆனால் அது மிகக் குறுகிய நேரமே நீடித்தது,” என அவர் கூறினார்.
இந்த நிலநடுக்கம் சுரிகாவ் டெல் நோர்தே மாகாணத்தில் உள்ள டாபா நகராட்சிக்கு அருகே, சுமார் 69 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக USGS குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த வாரம் மிண்டனாவ் தீவின் கிழக்குப் பகுதியில் 7.4 மற்றும் 6.7 அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன. அதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு 6.9 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் செபு மாகாணத்தில் ஏற்பட்டதில் 76 பேர் உயிரிழந்ததுடன், 72,000 வீடுகள் சேதமடைந்ததாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் நாடு பசிபிக் பெருங்கடல் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் தீவிர நில அதிர்வு வட்டத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்நாட்டில் தினசரி நிலநடுக்கங்கள் நிகழ்வது வழக்கமானதாகும்.
1976ஆம் ஆண்டு மிண்டனாவ் தீவின் தென்மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட 8.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி, சுமார் 8,000 பேரை பலிகொண்டது. அது பிலிப்பைன்ஸின் வரலாற்றிலேயே மிகப்பெரிய இயற்கை பேரிடராக பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|