2025 இல் தொழில்நுட்ப துறையில் பாரிய பணிநீக்கம்
AI வளர்ச்சி காரணமாக 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலையை குறைத்துள்ளன.
61,000 வேலை இழப்பு... மைக்ரோசாப்ட், ஐபிஎம், கூகுள், அமேசான் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்..!
தொழில்நுட்ப துறைக்கு மிகுந்த அதிர்ச்சியாக அமைந்திருக்கும் ஆண்டாக இரண்டாயிரத்து இருபத்தைந்து அமைந்திருக்கிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் மேலாண்மை மாற்றங்கள் காரணமாக, ஏற்கனவே 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 61,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான Microsoft, தனது திட்டமிட்ட வேலை சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 6,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது. இது 2023-ம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய நீக்கம் எனும் புகழுடன் செயல்படுகிறது.
பாரிய பணிநீக்கம்
கூகுள் நிறுவனம், 2023-ம் ஆண்டு 12,000 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, 2025-ல் தனது வணிக மற்றும் விளம்பர பிரிவுகளிலிருந்து மேலும் 200 பேரை நீக்கியுள்ளது.
இது அதன் செயல்பாட்டு அமைப்பை சீரமைத்து, அதிக லாபம் தரும் பிரிவுகளில் கவனம் செலுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். கூகுளின் மற்ற பிரிவுகள் – Pixel, Android, Chrome, Cloud ஆகியவற்றிலும் ஏற்கனவே பணிநீக்கம் நடந்துள்ளது.
அமேசானும் இதே பாதையில் சென்றுள்ளது. அதன் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவில், குறிப்பாக அலெக்சா, கிண்டில் மற்றும் Zoox போன்ற கிளைகளில் 100 வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் முடிவுகள் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறிக்கும் ஒரு முக்கிய உதாரணம்.
இதேபோல், பாதுகாப்பு மென்பொருள் வழங்கும் CrowdStrike நிறுவனம், உலகளாவிய பணியாளர்களில் 5% ஊழியர்களை நீக்கி, வளர்ச்சியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கின்றது. இது ஒரு வகையில் முதலீட்டாளர்களுக்கு ஈடுசெய்யும் பங்காகவும் பார்க்கப்படுகிறது.
ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா, “பல வேலைகளை செயற்கை நுண்ணறிவு செய்யத் தொடங்கியதால், மனித வள தேவை குறைவடைந்துள்ளது. எனினும், வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளில் நாம் புதிய முதலீடுகளை செய்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த பணிநீக்கம், துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. நிறுவனங்கள் விரிவாக்கத்தைவிட, செயல்திறன், ஒழுங்கமைப்பு மற்றும் மின்னணு தகவமைப்பை முன்னிறுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், பல பாரம்பரிய வேலைகள் நிரந்தரமாக மாறும் நிலையில் உள்ளன. இது வேலை தேடுபவர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்குகிறது.
பணிநீக்கம் என்பது ஒரு கடுமையான அனுபவமாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்ப மாற்றங்கள் இடைவிடாது நடைபெறும் இந்த யுகத்தில், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, தொழில்முனைவோராக மாறுவது போன்ற பாதைகளும் திறக்கப்படுகின்றன. 2025 தொழில்நுட்பம் பணியை எடுத்தாலும், நம்மை கைவிடாது என்பதை உணர வேண்டும்.