Home>உலகம்>பப்புவா நியூ கினியாவ...
உலகம்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

byKirthiga|about 1 month ago
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

10 கிமீ ஆழத்தில் மையம்; சுனாமி எச்சரிக்கை இல்லை என பசிபிக் மையம் அறிவிப்பு

லே நகரை அருகில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

பப்புவா நியூ கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான லே அருகில், ரிக்டர் அளவையில் 6.6 அளவுடைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

லே நகர காவல் அதிகாரி மில்ட்ரெட் ஒங்கீஜ் ராய்ட்டர்ஸ் நிறுவனத்துக்கு தொலைபேசி வழியாக அளித்த தகவலில், “மிகவும் பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. சில நிமிடங்களுக்கு முன் இது நடந்ததால் சேதம் குறித்த விரிவான தகவல்கள் இதுவரை எங்களிடம் இல்லை. ஆனால் நிலைமை குறித்து நாங்கள் கவலையுடன் உள்ளோம்” என கூறினார்.

தற்போது வரை எந்தவித உள்ளூர் சேதங்களும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்ட தகவலின் படி, இந்த நிலநடுக்கத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

USGS வழங்கிய தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி லே நகரத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. லே நகரம் மொரோபி மாகாணத்தில் அமைந்துள்ளதுடன், சுமார் 76,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

ஜெர்மன் புவியியல் ஆய்வு மையமான GFZ முதலில் இதன் அளவை 6.8 என அறிவித்திருந்தாலும், பின்னர் அதனை 6.6 என திருத்தியது.

பப்புவா நியூ கினியா பசிபிக் பெருங்கடலில் உள்ள “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் புவியியல் வலயத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக பிரபலமானது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அதே நாட்டின் வடக்கு பகுதியான ஈஸ்ட் செபிக் மாகாணத்தில் 6.7 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் மூவர் உயிரிழந்ததுடன், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்திருந்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்