போதைப்பொருள் வழக்கு: ஆஜரான நடிகர் கிருஷ்ணா!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான கிருஷ்ணா
போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் கிருஷ்ணா – ஸ்ரீகாந்த் ஆஜராகவில்லை
போதைப்பொருள் வழக்கில் குற்றச்சாட்டுக்குள்ளாகிய நடிகர் கிருஷ்ணா, சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதே வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜராகாதது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் மாதத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விற்பனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் பேரிலேயே ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு, இருவரும் காவல் விசாரணைக்கு பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணையின் போது இவர்களுடன் தொடர்புடைய நிதி பரிமாற்றங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அடிப்படையில் கெவின் என்ற நபர் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்களுக்கு போதைப்பொருள் வழங்கிய கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.40,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில், அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஸ்ரீகாந்த் செவ்வாய்கிழமை ஆஜராகாத நிலையில், கிருஷ்ணா இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
தற்போது, பணப்பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நிதி வட்டாரங்கள் குறித்த பல்வேறு கோணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிருஷ்ணாவிடம் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|