தீவிர சிகிச்சை பிரிவில் ரோபோ சங்கர் அனுமதி
நீர்சத்து குறைவு, ரத்த அழுத்தம் காரணமாக ரோபோ சங்கர் ICU-வில் அனுமதி
தீவிர சிகிச்சைப் பிரிவில் ரோபோ சங்கரின் உடல்நிலை கண்காணிப்பு
சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்றவர் ரோபோ சங்கர்.
தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பின் மூலம் சிறிய திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு முன்னேறிய அவர், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
விஜய் நடித்த புலி, அஜித் நடித்த விஸ்வாசம், தனுஷ் நடித்த மாரி, சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மெலிந்து காணப்பட்டாலும், ரோபோ சங்கர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையில், சென்னை பகுதியில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் நேற்று (17ம் திகதி) திடீரென மயங்கி விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அவர் சென்னை பெருங்குடி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவர்கள் வழங்கிய தகவலின்படி, ரோபோ சங்கருக்கு நீர்சத்து குறைவு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது.
ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சற்று சீராக இருந்தாலும், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (ICU) மாற்றினர். தற்போது, அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திரைப்படத்துறையினரும் நெருங்கியவர்களும் மருத்துவமனைக்கு வருகை தந்து உடல்நிலை பற்றி விசாரித்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள ரோபோ சங்கர் விரைவில் குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|