ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
6.3 ரிக்டர் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்
ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – பலி மற்றும் சேதம் பற்றிய தகவல்கள் வெளியாகவுள்ளது
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான மசார்-இ-ஷரீஃப் அருகே திங்கட்கிழமை அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அதன் மையப்புள்ளி மசார்-இ-ஷரீஃப் நகரைச் சுற்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்நகரில் சுமார் 5 லட்சத்து 23 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.
USGS தன் தானியங்கி எச்சரிக்கை அமைப்பான PAGER-ல் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பெரும் மனித உயிர் இழப்புகளும், பரவலான சேதங்களும் ஏற்படும் வாய்ப்பை குறிக்கிறது. கடந்த காலத்தில் இதே அளவிலான எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் பிராந்திய அல்லது தேசிய அளவிலான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதுவரை அந்த சேதங்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் இடம்பெறுவதை காண முடிந்தது. சில வீடியோக்களில் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை இடிபாடுகளில் இருந்து எடுக்கின்ற காட்சிகளும் வெளிவந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தாலிபான் நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆப்கானிஸ்தான் புவியியல் ரீதியாக மிகவும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ளது; இரண்டு முக்கிய செயல்படும் புவிச் சலன கோடுகள் அந்த நாட்டை கடக்கின்றன.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அந்நாட்டிலும் பாகிஸ்தானின் வடப்பகுதியிலும் பல நூறு பேர் உயிரிழந்தனர். 2023 இல் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் குறைந்தது ஆயிரம் பேரின் உயிரை காவு கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|