தொலைத்தொடர்பு, வங்கிகள், கல்வி – அனைத்தும் பாதிப்பு
தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் முழுவதும் இணைய சேவை துண்டிப்பு
ஆப்கானிஸ்தானில் முழுமையான இணையத் தடை – மக்கள் பதட்டம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பே ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளை துண்டித்திருந்த நிலையில் தற்போது “முழுமையான இணையத் தடை” ஏற்பட்டுள்ளதாக இணைய கண்காணிப்பு நிறுவனம் Netblocks தெரிவித்துள்ளது.
காபூலில் உள்ள அலுவலகங்களுடன் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தொடர்பை இழந்துவிட்டதாகவும், மொபைல் இணையம் மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவைகள் கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடை குறித்து தாலிபான் அரசு எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, தாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய ஷரியா சட்ட விதிகளின் அடிப்படையில் பல்வேறு தடைகளை அவர்கள் விதித்து வருகின்றனர்.
தொலைத்தொடர்பு சேவைகள் “அடுத்த அறிவிப்பு வரும் வரை” நிறுத்தப்பட்டிருக்கும் என தாலிபான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
காபூல் விமான நிலையத்திலிருந்து புறப்பட இருந்த பல விமானங்களும் ரத்துசெய்யப்பட்டதாக Flightradar24 தெரிவித்துள்ளது. வங்கிகள் மற்றும் மின் வர்த்தக சேவைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தூதரக அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்தனர்.
மாலை 5 மணிக்கு (உள்ளூர் நேரம்) இணைய சேவை துண்டிக்கப்பட்டதால், அதிகாலை வங்கிகள் மற்றும் வணிக சேவைகள் தொடங்கும் போது அதன் தாக்கத்தை மக்கள் உணருவார்கள் என்று கூறப்படுகிறது.
சமீப வாரங்களில் பல மாகாணங்களில் இணைய வேகம் குறைதல் அல்லது முழுமையான இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் கல்வி மற்றும் வணிக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
ஒரு பணம் மாற்று வியாபாரி பிபிசியிடம், தனது மகள்களின் ஆங்கில ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார். “அவர்கள் கல்வியைத் தொடரும் கடைசி வாய்ப்பு கூட இப்போது முடிந்துவிட்டது” என அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், “என் கல்வியை முடித்து ஆன்லைன் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உடைந்துவிட்டது” என கூறினார்.
ஆப்கானிய ஊடகவியலாளர் ஹமீத் ஹைதாரி, “நாடு முழுவதும் தனிமை சூழ்ந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் சுலைமாங்கில், “ஆப்கானிய குரல்கள் இல்லாத அமைதி செவிகளில் குத்துகிறது” என சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
தாலிபான், மாற்று இணைய சேவையை அறிமுகப்படுத்துவோம் என்று அறிவித்திருந்தாலும், இதுவரை எந்தவிதத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இணையத் தடை பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் 12 வயதுக்கு மேல் கல்வி பெறத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு மிட்வைஃபரி பாடநெறிகள் ரத்து செய்யப்பட்டதால் ஆன்லைன் கல்விதான் ஒரே வழி என்று பலர் கூறியிருந்தனர். ஆனால் தற்போது அந்த வாய்ப்பும் முடங்கியுள்ளது.
“இணையம் துண்டிக்கப்பட்டது என்ற செய்தி வந்தவுடன் என் உலகமே இருண்டது” என்று ஒரு பல்கலைக்கழக மாணவி பிபிசியிடம் தெரிவித்தார்.
2021 இல் அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தாலிபான் திடீரென ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|