Home>இந்தியா>Air India விபத்து: க...
இந்தியாஉலகம் (அமெரிக்கா)

Air India விபத்து: குடும்பங்கள் அமெரிக்காவில் வழக்கு

byKirthiga|about 2 months ago
Air India விபத்து: குடும்பங்கள் அமெரிக்காவில் வழக்கு

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு

போயிங், ஹனிவெல் அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டதாக குடும்பங்கள் குற்றச்சாட்டு

ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் மாதம் விபத்துக்குள்ளாகி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர் அமெரிக்காவில் விமான உற்பத்தி நிறுவனம் போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஹனிவெல் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில், விபத்துக்குக் காரணமாக இருந்தது குறைபாடுள்ள எரிபொருள் சுவிட்ச்கள் (fuel switches) என்றும், இதைத் தெரிந்திருந்த போதிலும் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

அகமதாபாதில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 171 (Boeing 787 Dreamliner), புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். இதில் 229 பயணிகள், 12 விமான ஊழியர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பொதுமக்கள் அடங்குவர்.

விபத்து தொடர்பான இந்திய விமான விபத்து விசாரணை ஆணையத்தின் (AAIB) ஆரம்பகால அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் எரிபொருள் வழங்கல் துண்டிக்கப்பட்டதால் என்ஜின் செயலிழந்தது தெரியவந்துள்ளது.

இது சுவிட்ச் தவறுதலாக "run" நிலையிலிருந்து "cut-off" நிலைக்கு மாறியதாலேயே ஏற்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

Selected image


அதேவேளை, 2018 ஆம் ஆண்டு அமெரிக்க விமானப் பாதுகாப்பு நிர்வாகம் (FAA) வெளியிட்ட ஆலோசனையில், எரிபொருள் சுவிட்ச்களின் பூட்டும் முறையை (locking mechanism) சீராய்வு செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதை கட்டாயப்படுத்தவில்லை. இதையே குடும்பங்கள் வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"இந்த வடிவமைப்பு குறைபாடு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட வழிவகுத்தது. இதனால் முழுமையான சக்தி இழப்பு ஏற்பட்டது. போயிங் மற்றும் ஹனிவெல் எதுவும் செய்யவில்லை" என வழக்கில் குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுவிட்சுகளை சீரமைப்பதற்கான பாகங்களை வழங்கவோ, ஆய்வுகள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என எச்சரிக்கவோ நிறுவனங்கள் தவறியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கை டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த லானியர் லா ஃபிர்ம் (Lanier Law Firm) சார்பாக குடும்பத்தினர் தொடர்ந்துள்ளனர். விபத்து தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை 2026ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்