இந்தியாவுக்கு கோப்பை தர மறுப்பு – A.C.Cதலைவர்
ஆசியக் கோப்பை வெற்றி கோப்பை இந்தியா பெற்றுக்கொள்ளவில்லை – நக்வி பதில்
இந்திய அணிக்கு கோப்பை, பதக்கம் வழங்கப்படுமா? தீர்மானம் இன்றும் எட்டப்படவில்லை
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தபோதிலும், அந்த வெற்றிக் கோப்பையை இந்திய அணிக்கு வழங்காமல் சர்ச்சை எழுந்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, இந்திய அணி நேரடியாக தன்னிடம் இருந்து கோப்பையை பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
நக்வி தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ACC தலைவராக நான் அந்த நாளிலேயே கோப்பையை வழங்க தயாராக இருந்தேன். இன்னும் தயார் நிலையில் இருக்கிறேன். உண்மையாகவே அவர்கள் அதை விரும்பினால், எங்கள் அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து பெறலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
செவ்வாய்கிழமை துபாயில் நடைபெற்ற ACC கூட்டத்திலும் இந்த விவகாரம் பேசப்பட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பிரதிநிதிகள் ராஜீவ் ஷுக்லா மற்றும் அஷிஷ் ஷேலர் ஆகியோர் ஆன்லைனில் கலந்துகொண்டதால், எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை.
இறுதிப் போட்டி முடிந்ததும், கோப்பை வழங்கும் விழாவில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. இந்திய அணி, நக்வியிடமிருந்து கோப்பையும் பதக்கங்களையும் பெற மறுத்ததால், சில வீரர்களுக்கே தனிப்பட்ட விருதுகள் பிற அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டன. ஆனால் பிரதான கோப்பை ACC அதிகாரியால் மேடையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய அணி வெற்றியை கொண்டாடினாலும், கோப்பை மற்றும் பதக்கங்கள் இல்லாமல் மேடையை விட்டு இறங்கியது.
இந்த சர்ச்சை, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஆசியக் கோப்பை முழுவதும் நிலவிய பதற்றத்தின் உச்சமாக மாறியது. போட்டிகளின் முன்பும் பின்பும் இரு அணிகள் கை குலுக்க மறுத்து வந்தன. இதனால் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இந்திய அணியை கடுமையாக விமர்சித்தார்.
செப்டம்பர் 14 அன்று நடைபெற்ற முதல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பின், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெளியிட்ட கருத்துகள் காரணமாக அவர் ICC யின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகி, போட்டிக் கட்டணத்தின் 30% அபராதமாக செலுத்த வேண்டியிருந்தது. அதேபோல் செப்டம்பர் 21-ஆம் தேதி நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஹாரிஸ் ரவுப் தனது நடத்தை காரணமாக அபராதம் விதிக்கப்பட்டார்.
இறுதியில், ஆசியக் கோப்பை இறுதியில் இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்து, வரலாற்றில் முதன்முறையாக ஆசியக் கோப்பை இறுதியில் இரு அணிகள் மோதிய போட்டியை வெற்றிகரமாக முடித்தது. எனினும், கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்படாத சர்ச்சை இன்னும் தொடர்கிறது.
இந்நிலையில், அக்டோபர் 5 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதவுள்ளன.