டாக்காவில் ஆடை தொழிற்சாலை மற்றும் வேதியியல் கிடங்கில் தீ, 16 பேர் பலி
மீட்பு பணிகள் தொடர்கின்றன – உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம்
வங்கதேச தலைநகர் டாக்காவின் மிர்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு ஆடைத் தொழிற்சாலையிலும் அதனை அடுத்துள்ள வேதியியல் கிடங்கிலும் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு சேவை இயக்குநர் தாஜுல் இஸ்லாம் சௌதுரி தெரிவித்ததாவது, “இரண்டாம் மற்றும் மூன்றாம் மாடிகளில் இருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார்.
தகவலின்படி, நான்கு மாடிகள் கொண்ட அந்த ஆடைத் தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் மதியம் நேரத்தில் தீ பரவியதாகவும், பின்னர் அருகிலிருந்த வேதியியல் கிடங்கிற்கும் அது பரவியதாகவும் கூறப்படுகிறது. அந்த கிடங்கில் பிளாஸ்டிக், ப்ளீச்சிங் பவுடர், ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ஆபத்தான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
மூன்று மணி நேர கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், கிடங்கில் ஏற்பட்ட தீ நீண்ட நேரம் எரிந்துகொண்டே இருந்தது. சம்பவ இடத்தில் துயரத்தில் மூழ்கிய உறவினர்கள் தங்கள் உறவுகளைத் தேடிச் சுற்றியபடி, சிலர் அவர்களின் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி அழுதுகொண்டிருந்தனர்.
ஒரு தந்தை தனது மகள் பார்சானா அக்தரைத் தேடி வருந்தியபடி, “என் மகள் அங்கே வேலை செய்தாள். தீ பற்றி எரிகிறது என்று கேட்டவுடன் உடனே வந்தேன். இன்னும் அவளை காணவில்லை... என் மகளை மீண்டும் பார்க்கவேண்டும்,” என்று கண்கலங்கினார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்ததாவது, தொழிற்சாலை உரிமையாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. போலீசும் இராணுவமும் அவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. மேலும், அந்த ஆடைத் தொழிற்சாலை அல்லது வேதியியல் கிடங்கிற்கு எவ்வித அனுமதியோ, தீ பாதுகாப்பு திட்டமோ இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், தொழிற்சாலை டின் கூரையுடன் இருந்ததையும், மேல்மாடிக்குச் செல்லும் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததையும் கண்டறிந்துள்ளனர். இதனால் பணியாளர்கள் மேலே செல்வதோ கீழே இறங்குவதோ முடியாமல் சிக்கியுள்ளனர். வேதியியல் வெடிப்பால் ஏற்பட்ட திடீர் தீ பரவல் மற்றும் விஷ வாயுவால் பலர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
மிகவும் எரிந்த நிலையில் பல உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால், அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனைகள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகம்மது யூனுஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவி வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வங்கதேசத்தில் தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட தரநிலைகள் குறைவாக இருப்பது காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல தொழிற்சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இது அந்நாட்டின் முக்கியமான ஆடைத் துறையின் நற்பெயரை பெரிதும் பாதித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு தஜ்ரீன் ஃபேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 112 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதன்பின் 2013-ல் ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,135 தொழிலாளர்கள் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|