பாகிஸ்தான் வீரர்கள் மீது புகார் – ICC விசாரணை நடத்துமா?
ஆசியக் கோப்பை போட்டி சம்பவம் குறித்து ICC-க்கு முறையீடு
சூர்யகுமார் கருத்துக்கும் PCB எதிர்ப்பு
இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர்ஸ் போட்டியில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் மீது BCCI அதிகாரப்பூர்வ புகார் மனுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) அனுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஆட்டத்தைத் தொடர்ந்து, புதன்கிழமை மின்னஞ்சல் வழியாக இந்த புகார் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபர்ஹான் தனது அரைசதம் முடித்தபின் காட்டிய கொண்டாட்டமும், ரவுப் பவுண்டரி அருகில் பந்துவீசும் போது ரசிகர்களை நோக்கி காட்டிய சைகையும் சமூக ஊடகங்களில் வைரலாகிய நிலையில், அதுவே BCCI புகாருக்குக் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
வீரர்கள் குற்றச்சாட்டை மறுத்தால், அவர்கள் ICC விசாரணைக்கு நேரடியாக வருமாறு அழைக்கப்படலாம். போட்டியின் மேட்ச் ரெஃபரீ ரிச்சி ரிச்சர்ட்சன் முன்னிலையில் கேள்வி பதில் நடைபெற வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, சூர்யகுமார் யாதவ் கடந்த செப்டம்பர் 14-ஆம் திகதி நடந்த முதல் சுற்று போட்டியில் இந்திய வெற்றியை “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு” அர்ப்பணித்ததை, அரசியல் கருத்தாகக் கருதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (PCB) ICC-க்கு புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த ஆட்டத்துக்குப் பிறகு வீரர்கள் கை குலுக்காதது, டாஸ் நேரத்தில் கேப்டன்கள் பேசாதது போன்ற சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தன. இதனிடையே, சமீபத்திய ஆட்டத்தில் ஷஹீன் ஆப்ரிடி, ஹாரிஸ் ரவுப் ஆகியோருக்கும் இந்திய ஓப்பனர்கள் அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோருக்கும் இடையே பதட்டமான தருணங்கள் நடைபெற்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|