Home>இலங்கை>கொழும்பு விமான நிலைய...
இலங்கை

கொழும்பு விமான நிலையத்தில் தடம் புரண்ட குடிவரவு அமைப்பு

byKirthiga|about 2 months ago
கொழும்பு விமான நிலையத்தில் தடம் புரண்ட குடிவரவு அமைப்பு

போர்டர் கண்ட்ரோல் கணினி கோளாறு காரணமாக பாதிப்பு – சுற்றுலா பயணிகள் சிரமம்

மீண்டும் மீண்டும் கோளாறுகள் – அரசின் கீழ் புதிய அமைப்பு தேவை என வலியுறுத்தல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை மற்றும் புறப்பாட்டு பகுதிகளில் செயல்படும் குடிவரவு திணைக்களத்தின் “எல்லைக் கட்டுப்பாட்டு கணினி அமைப்பு” (Border Control Computer System) இன்று (20) பிற்பகல் சுமார் 2 மணி 30 நிமிடங்கள் செயலிழந்தது.

பின்னர் மாலை 4.15 மணியளவில் அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் 1.45 மணியிலிருந்து அமைப்பு தற்காலிகமாக செயலிழந்திருந்தது. கடந்த எட்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனமொன்றின் கீழ் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் இந்த அமைப்பு அடிக்கடி சிக்கல்களை சந்தித்து வருவதாக குடிவரவு திணைக்களத்தின் உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாதம் பலமுறை அமைப்பு செயலிழப்பதும், குறிப்பாக பிற்பகல் நேரங்களில் அமைப்பு மந்தமாக இயங்குவதும் அடிக்கடி நடைபெறுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Selected image


அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகள் வருகையை கருத்தில் கொண்டு, இவ்வமைப்பை அரசின் கீழ் நிறுவப்பட்டு பராமரிக்கப்படும் புதிய கணினி அமைப்பால் மாற்றுவது அவசரத் தேவையாக இருப்பதாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையில், ஐரோப்பாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களின் கணினி அமைப்புகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் உட்பட பல ஐரோப்பிய விமான நிலையங்கள், மின்னணு சேக்-இன் மற்றும் சாமான்கள் பரிசோதனை அமைப்புகளை குறிவைத்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சைபர் தாக்குதலினால் பயணிகள் கையால் பதிவு செய்யப்பட்டு விமானங்களில் ஏற்றப்பட்டதாகவும், ஜெர்மனியின் பெர்லின் பிரான்டன்பர்க் விமான நிலையத்திலும் நீண்ட நேரம் காத்திருப்பு ஏற்பட்டதாகவும் அங்கு வெளியான அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்