Home>உலகம்>இந்திய மாணவர்களுக்கு...
உலகம் (கனடா)இந்தியாகல்வி

இந்திய மாணவர்களுக்கு கனடா கதவை மூடுகிறதா?

byKirthiga|2 days ago
இந்திய மாணவர்களுக்கு கனடா கதவை மூடுகிறதா?

கனடாவின் கடுமையான மாணவர் வீசா விதிகள் - பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள்

கனடா அரசின் கடும் விதிமுறையால் இந்திய மாணவர் பாதிப்பு

கனடா அரசு சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி கடிதங்களை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் குறைத்தது.

இது அந்நாட்டில் தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். குறிப்பாக, மாணவர் வீசா மோசடிகளை தடுக்கவும், சர்வதேச மாணவர் முறைமையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான கனடா குடிவரவு துறையின் தரவுகளின்படி, இந்திய மாணவர்கள் சமர்ப்பித்த கல்வி அனுமதி விண்ணப்பங்களில் சுமார் 74% நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது 2023 ஆகஸ்ட் மாதத்தில் இருந்த 32% நிராகரிப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது இரட்டிப்பு அளவில் உயர்ந்துள்ளது. இதேசமயம், மொத்தமாக சர்வதேச மாணவர் விண்ணப்பங்களில் 40% மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. சீன மாணவர்களின் விண்ணப்பங்களில் 24% நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, இந்திய மாணவர் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் கடுமையாக குறைந்துள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் 20,900 இந்திய மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2025 ஆகஸ்ட் மாதத்தில் அது வெறும் 4,515 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக கனடாவிற்கு அதிகமான மாணவர்களை அனுப்பிய நாடு இந்தியாவாக இருந்தாலும், தற்போது இந்தியாவே அதிக நிராகரிப்பு விகிதம் கொண்ட நாடாக மாறியுள்ளது.

இந்த மாணவர் வீசா நிராகரிப்பு எண்ணிக்கை, கடந்த ஒரு ஆண்டாக இந்தியா மற்றும் கனடா இடையே நிலவி வரும் தூதரக பதட்டத்தின் பின்னணியில் மேலும் கவனம் ஈர்த்துள்ளது.

முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சற்ரே பகுதியில் கொல்லப்பட்ட கனடிய நாட்டு நபரின் மரணத்தில் இந்திய அரசாங்கம் தொடர்புடையதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே உறவு சிதைந்தது. இந்தியா இதனை முற்றிலும் மறுத்துள்ளது.

மோசடிகளை தடுக்க கனடாவின் முயற்சி

2023 ஆம் ஆண்டு, கனடா அதிகாரிகள் சுமார் 1,550 கல்வி அனுமதி விண்ணப்பங்கள் போலியான கல்வி அழைப்புக் கடிதங்களுடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து வந்தவையாக இருந்தன. இதனையடுத்து, கனடா அரசு புதிய சரிபார்ப்பு முறைமையை அறிமுகப்படுத்தி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,000 க்கும் மேற்பட்ட சந்தேகமான கடிதங்களை கண்டறிந்தது.

இதனுடன், சர்வதேச மாணவர்களுக்கு நிதி தேவைகள் மற்றும் ஆவண சரிபார்ப்பு விதிகளையும் கடுமைப்படுத்தியுள்ளதாக குடிவரவு துறை தெரிவித்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம், மாணவர் விண்ணப்ப நிராகரிப்புகள் குறித்து கவலை தெரிவித்தாலும், வீசா வழங்குவது கனடா அரசின் அதிகாரம் எனக் கூறியுள்ளது.

மேலும், “உலகிலேயே மிகுந்த திறமையுள்ள மாணவர்கள் இந்தியாவிலிருந்து வருகின்றனர், அவர்களின் கல்வி திறமையால் கனடா கல்வி நிறுவனங்கள் பலனடைந்துள்ளன” என தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கனடாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அனிதா ஆனந்த், அக்டோபர் மாதத்தில் இந்தியா விஜயத்தின் போது, “நாங்கள் குடிவரவு முறையின் நம்பகத்தன்மையைப் பேண விரும்புகிறோம், ஆனால் இந்திய மாணவர்கள் கனடாவில் தொடர்ந்து கல்வி கற்க நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்