சீனாவின் விசா விலக்கு திட்டம் 2026 வரை நீட்டிப்பு
ஐரோப்பா நாடுகளுக்கான விசா விலக்கு சீனாவில் நீட்டிப்பு
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கான சீனாவின் விசா விலக்கு 2026 வரை நீட்டிப்பு
சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கான விசா விலக்கு திட்டத்தை 2026 டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் கீழ் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து போன்ற நாடுகள் தொடர்ந்தும் விசா இல்லாமல் சீனாவுக்கு குறுகிய கால பயணங்களை மேற்கொள்ளலாம்.
அதோடு, ஸ்வீடனும் வரும் நவம்பர் 10 முதல் இந்த திட்டத்தில் இணைக்கப்படுகிறது என சீன வெளியுறவுத் துறை திங்கட்கிழமை அறிவித்தது.
இந்த திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த நாடுகளின் குடிமக்கள் சீனாவிற்கு சுற்றுலா, வணிகப் பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்ற நோக்கில் குறுகிய காலத்திற்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
சீனா 2023ஆம் ஆண்டில், கொரோனா பிந்தைய சர்வதேச பயணங்களை மீண்டும் உயிர்ப்பிக்கவும், உலக நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தவும் தற்காலிக விசா விலக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டம் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
சமீபத்திய விரிவாக்கம், சீனா வெளிநாட்டு பயணிகளையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்துவதோடு, ஐரோப்பாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது.
சீன அதிகாரிகள் விரைவில் இந்த திட்டத்திற்கான தகுதி விதிமுறைகள், தங்கும் கால அளவு மற்றும் நுழைவு நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|