Home>உலகம்>மூன்று மாதத்தில் 50 ...
உலகம்வாழ்க்கை முறை (ஆரோக்கியம்)

மூன்று மாதத்தில் 50 கிலோ குறைத்தால் கார் பரிசு!

byKirthiga|9 days ago
மூன்று மாதத்தில் 50 கிலோ குறைத்தால் கார் பரிசு!

3 மாதத்தில் 50 கிலோ குறைத்தால் கார் பரிசு! சர்ச்சை கிளப்பிய சீன ஜிம்

50 கிலோ குறைத்தால் போர்ஷே கார் தருவதாக அறிவித்த சீன ஜிம் – ஆரோக்கிய நிபுணர்கள் அதிர்ச்சி

சீனாவின் வடக்கு பகுதியான ஷாண்டாங் மாகாணத்தின் பின்ஜோ நகரில் உள்ள ஒரு உடற்பயிற்சி மையம், மூன்று மாதங்களில் 50 கிலோ எடையை குறைக்கும் சவாலில் வெற்றி பெற்றவருக்கு ஒரு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால், இந்த பிரசாரம் தற்போது ஆரோக்கிய நிபுணர்களிடையே கடுமையான எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த சவால் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. ஜிம் வெளியிட்ட விளம்பரப் பதாகையின் படி, மூன்று மாதங்களில் 50 கிலோ எடையை குறைக்க முடிந்தால், சுமார் 1.1 மில்லியன் யுவான் (அமெரிக்க டாலர் 1.55 லட்சம்) மதிப்புள்ள போர்ஷே பனமேரா கார் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி பயிற்சியாளர் வாங் என்ற நபர், “இந்த சவால் உண்மையாகவே நடக்கிறது. மொத்தம் 30 பேர் வரை பதிவு செய்யலாம். தற்போது ஏழு முதல் எட்டு பேர் வரை பதிவு செய்துள்ளனர்,” என தெரிவித்துள்ளார்.

பங்கேற்புக்கான பதிவு கட்டணம் 10,000 யுவான் (சுமார் ரூ.1.4 லட்சம்) என கூறப்பட்டுள்ளது. இது உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது. ஆனால், பயிற்சி முறை, உணவு திட்டம் மற்றும் எடை குறைப்பு அளவுகோல்கள் குறித்து எந்தவித தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை.

மேலும், வழங்கப்படும் போர்ஷே கார் புதியது அல்ல, ஜிம் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த 2020ஆம் ஆண்டுக்கான பழைய மாடல் எனவும் வாங் தெரிவித்துள்ளார்.

இந்த பிரசாரம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரே நேரத்தில் மிகுந்த எடையைக் குறைப்பது உடல்நலத்துக்கு ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்