யாழ் மாநகர சபைக்கு காற்று மாசை தடுக்கும் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காற்று மாசை குறைக்க நீதிமன்ற உத்தரவு
குப்பை அகற்றல் மற்றும் இரசாயன கழிவு காரணம் – வழக்கு விசாரணையில் நீதிமன்ற உத்தரவு
யாழ்ப்பாணப் பகுதியில் நிலவும் காற்று மாசை குறைக்கும் வகையில் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோகந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.
இந்த வழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்தபோது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கின் போது, காற்று மாசைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என பிரதிவாதிகளின் வழக்கறிஞர்களிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதனை அடுத்து, யாழ்ப்பாண மாநகர சபை சட்டத்தின் படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான தேவையான உதவிகளை மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை (CEA) வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
மனுதாரர் டாக்டர் நடராஜா, குப்பை அகற்றும் முறைகள் மற்றும் இரசாயன கழிவுகளை வெளியிடுதல் ஆகியவை யாழ்ப்பாணத்தில் காற்று மாசை அதிகரிக்க காரணமாக உள்ளன என குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், உடனடியாக சூழ்நிலையை கட்டுப்படுத்த பிரதிவாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும்.