Home>இந்தியா>புயல் மொந்தா இன்று ஆ...
இந்தியா

புயல் மொந்தா இன்று ஆந்திரா கடற்கரையை தாக்கும்!

byKirthiga|12 days ago
புயல் மொந்தா இன்று ஆந்திரா கடற்கரையை தாக்கும்!

தமிழகம், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் ஒடிசாவுக்கு கனமழை எச்சரிக்கை

இந்தியாவின் ஆந்திரா கடற்கரையை நோக்கி புயல் மொந்தா — மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம்

தென்கிழக்குப் பங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வானிலை மாற்றம் இன்று (27) புயல் மொந்தா எனும் பெயரில் வலுவடைந்து ஆந்திரா மாநிலத்தின் கடற்கரை பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.

இந்த புயல் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் வீசக்கூடும் என்றும், சில இடங்களில் 110 கி.மீ வேகத்தையும் எட்டக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா அருகே, மச்சிலிப்பட்டணம் மற்றும் கலிங்கப்பட்டணம் இடையில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆறு மணி நேரங்களில் தென்கிழக்கு பங்காள விரிகுடாவில் உருவான குறைந்த அழுத்தம் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது இன்று காலை புயலாகவும், நாளை கடுமையான புயலாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் அக்டோபர் 26 முதல் 29 வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், அனைத்து தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசரநிலைகளில் கூடுதல் குழுக்களும் உடனடி பணியில் ஈடுபட தயாராக உள்ளன.

புயல் மொந்தா காரணமாக கடல் அலைகள் அதிகரித்து கடலோர பகுதிகளில் கடும் காற்று மற்றும் மழை ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மக்களும் அதிகாரிகளும் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்