தந்தை கனவை நிறைவேற்றுவேன் – துனித் வெல்லலாகே
தந்தையின் கனவை நிறைவேற்ற உறுதியளித்த துனித் வெல்லலாகே
ஆசியக் கோப்பைக்கு மீண்டும் புறப்பட்ட துனித் வெல்லலாகே – தந்தை நினைவில் கண்ணீர்
இலங்கை அணியின் இளம் ஆல்-ரவுண்டர் துனித் வெல்லலாகே, தனது தந்தையின் ஒரே விருப்பம் தான் நல்ல கிரிக்கெட் வீரராகி நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதுதான் என்றும், அந்த கனவை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் போது தந்தையின் திடீர் மறைவால் இலங்கைக்கு திரும்பியிருந்த வெல்லலாகே, இன்று (20) காலை மீண்டும் தேசிய அணியில் சேரும் நோக்கில் பயணிக்க முன் இந்த கருத்துகளை பகிர்ந்தார்.
தந்தையின் ஆதரவை நினைவுகூர்ந்த அவர், “சின்ன வயதிலிருந்து என் தந்தையிடமிருந்து அளவில்லா ஆதரவு கிடைத்தது. அவரின் ஒரே ஆசை நான் நல்ல வீரராகி இலங்கைக்காக விளையாட வேண்டும் என்பதே. அந்த ஆசையை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். ஆசியக் கோப்பையில் இன்னும் பல போட்டிகள் உள்ளன, எனவே என் அணிக்காக நூறுமடங்கு முயற்சியையும் செய்வேன்,” என்றார்.
மேலும், இலங்கை அணியின் பயிற்சியாளர் சனத் ஜெயசூரியாவிடமிருந்து, அணித் தோழர்களிடமிருந்து, குறிப்பாக அணித்தலைவர் சரித் அசலங்காவிடமிருந்து, அதேபோல் இலங்கை மக்களிடமிருந்தும் பெற்ற ஊக்குவிப்பு தான் கடினமான தருணத்தில் மிகுந்த வலிமையை தந்தது என்றும் அவர் நன்றியைத் தெரிவித்தார்.
“நான் சிறுவயது முதல் காலை முதல் இரவு வரை என் தந்தை கிரிக்கெட்டுக்காக என்னை ஆதரித்தார். இன்று நான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு காரணம் அவருடைய தியாகங்களே. அவர் கொண்டிருந்த ஆசைகள் என்னவென்று எனக்குத் தெரியும், அதை நிறைவேற்றவே நான் வாழ்கிறேன்,” என்றும் வெல்லலாகே கூறினார்.
இவரது தந்தை மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சுரங்க வெல்லலாகே, கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி (வயது 54) திடீர் இதய நோயால் உயிரிழந்தார். அதே நாளில் துனித் வெல்லலாகே, அபுதாபியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை குழு ‘பி’ போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|