Home>இந்தியா>அசாமில் 5.8 ரிக்டர் ...
இந்தியா

அசாமில் 5.8 ரிக்டர் நிலநடுக்கம்

byKirthiga|about 2 months ago
அசாமில் 5.8 ரிக்டர் நிலநடுக்கம்

உடல்குரி மையமாக வடகிழக்கு இந்தியா அதிர்ச்சி – சேதமில்லை

அசாம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், வடக்கு வங்காளம் வரை அதிர்ச்சி உணர்வு

வடகிழக்கு இந்தியாவின் பல பகுதிகளை இன்று (செப்டம்பர் 14) மாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிரவைத்தது.

உயிரிழப்பு அல்லது சொத்துச் சேதம் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 4.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாம் மாநிலத்தின் உடல்குரி மாவட்டத்தில் இருந்ததாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 5 கிலோமீட்டர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “நிலநடுக்கத்தின் மையம் உடல்குரி அருகே இருந்தது. இதுவரை பெரும் சேதம் அல்லது உயிரிழப்பு எதுவும் இல்லை. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அசாம் மாநிலத்தின் உடல்குரி, சோனித்பூர், தாமுல்பூர், நல்பாரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள் அதிர்வுகளை உணர்ந்தனர். குவஹாத்தியில் மக்கள் பீதியுடன் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

அதேபோல மணிப்பூரின் மேற்குப் பகுதிகள், அருணாசலப் பிரதேசம், வடக்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டான் பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. அருணாசலப் பிரதேச தலைநகர் இடானகரிலும் மக்கள் வீடுகள், கடைகளில் இருந்து பீதியுடன் வெளியில் ஓடியனர்.

அருணாசலப் பிரதேச பேரிடர் மேலாண்மை செயலாளர் டேனி சுலு, “இத்துடன் structural damage (கட்டிடம் சேதம்) அல்லது உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. நிலைமையை நெருங்கிய கண்காணிப்பில் வைத்திருக்கிறோம். அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

வடகிழக்கு இந்தியா உயர் நிலநடுக்க மண்டலத்தில் (High Seismic Zone) அமைந்துள்ளதால், இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அசாமில் இருநாள் பயணத்தில் இருந்தார். வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ. 18,531 கோடி மதிப்பிலான சாலை, சுகாதாரம், தொழில் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்களைத் தொடங்கி வைத்து இருந்தார்.