இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்
1400 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து திருச்சபை புதிய வரலாறு படைத்தது
இங்கிலாந்து திருச்சபையில் வரலாற்று சாதனை – முதல் பெண் பேராயர் பதவி ஏற்றார்
இங்கிலாந்தின் கிறிஸ்தவ வரலாற்றில் புதிய பக்கமாக, திருச்சபையின் 1400 ஆண்டுகால மரபில் முதன்முறையாக ஒரு பெண் பேராயர் பதவி ஏற்றுள்ளார். 63 வயதான சாராம் முல்லாலி, கேன்டர்பரி தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு விழாவில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார். இவர் தற்போது ஆங்கிலிகன் சபையின் 106வது பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக 2018ஆம் ஆண்டு முதல் லண்டன் ஆயராக பணியாற்றிய முல்லாலி, சபையில் பல முக்கியமான சமூக மாற்றங்களுக்கான குரலாக திகழ்ந்தவர். கடந்த நவம்பரில் பேராயர் ஜஸ்டின் வெல்பி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த பதவிக்கு, ஜனவரியில் நடைபெற்ற ஆலோசனையின் பின்னர் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
சாராம் முல்லாலி இப்பதவியை ஏற்க வழிவகுத்தது, 2014ஆம் ஆண்டு திருச்சபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தமே. அந்த திருத்தம் பெண்களுக்கு பேராயர் பதவியில் அமரும் உரிமையை வழங்கியது. இதன் மூலம் நீண்டகால ஆண் ஆதிக்க மரபை முறியடித்து, பெண் தலைமையின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இவரின் நியமனம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
அதேசமயம், ஒரே பாலின திருமணங்கள் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து திறந்த மனதுடன் கருத்து தெரிவித்ததற்காக முல்லாலி முன்பு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். எனினும், அவரது நியமனம் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு ஒரு புதிய ஊக்கமாகக் கருதப்படுகிறது.
இங்கிலாந்து திருச்சபை இதனை “நம்பிக்கை மற்றும் சமத்துவத்தின் வெற்றி” என வர்ணித்துள்ளது. சாராம் முல்லாலி தனது பதவியேற்பு உரையில், “இது என்னை மட்டுமல்ல, எதிர்கால தலைமுறையிலான அனைத்து பெண்களுக்கும் ஒரு நம்பிக்கையின் சின்னமாகும்” எனக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|