இணைய வசதி இல்லாத விசித்திரமான நாடு - எரித்திரியா
ஆப்பிரிக்காவின் ‘வட கொரியா’ – இணையம் இல்லாத எரித்திரியா
மொபைல் டேட்டா, ATM, வெளிநாட்டு சேனல் கூட இல்லாத நாடு
இன்றைய உலகில், இணையம் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விட்டது.
எந்த விஷயத்தைப் பற்றியும் அறிய, வேலை செய்ய, தொடர்பு கொள்ள அனைத்திற்கும் இணையம் அவசியம். ஆனால், உலகில் இன்னும் சில நாடுகள், நவீன தொழில்நுட்பத்தின் இந்த அடிப்படை வசதியிலிருந்து தூரமாகவே உள்ளன.
அவற்றில், மிகவும் விசித்திரமான நாடாக எரித்திரியா (Eritrea) கருதப்படுகிறது.
கிழக்கு ஆப்பிரிக்காவில், செங்கடலின் கரையில் அமைந்துள்ள எரித்திரியா, உலகின் மிக ரகசியமான நாடுகளில் ஒன்று. அதன் அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் வெளிநாட்டு தொடர்பு தடைகள் காரணமாக, இதற்கு “ஆப்பிரிக்காவின் வட கொரியா” என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 117,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்நாட்டில், 3.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
எரித்திரியாவில் மொபைல் டேட்டா சேவை இல்லை. மக்கள் தொகையில் 1% பேரே வாழ்நாளில் ஒருமுறையாவது இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
சில இடங்களில் உள்ள இணையக் கஃபேக்கள் வழியாக மட்டுமே வைஃபை பயன்படுத்த முடியும். ஆனால் அங்கும் இணைய வேகம் 2G-க்கு கீழ், மிகவும் மெதுவாகவே இருக்கும்.
இந்த நாட்டின் சிறப்பு, ஒருபோதும் தேர்தல் நடத்தப்படாதது. 1962ல் எத்தியோப்பியாவால் இணைக்கப்பட்ட எரித்திரியா, 1993ல் தான் சுதந்திரம் பெற்றது.
இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவின் நீண்டகால ஆட்சியின் கீழ் இருந்த வரலாறும் உள்ளது. அதிகாரப்பூர்வ மொழி எதுவும் இல்லை; டிக்ரின்யா, அரபு, ஆங்கிலம் போன்றவை பேசப்படுகின்றன.
அங்கு தனியார் சொத்து என்றே இல்லை. மருத்துவமனைகள், விமான சேவைகள், போக்குவரத்து, தொலைக்காட்சி அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒரே ஒரு தொலைக்காட்சி சேனல் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது; வெளிநாட்டு சேனல்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன.
ஏடிஎம் வசதிகள் இல்லாததால், மக்கள் எங்கு சென்றாலும் பணத்தை நேரடியாக எடுத்துச் செல்ல வேண்டும்.
மேலும், எரித்திரியாவில் இருந்து வெளிநாடு செல்ல அரசின் அனுமதி கட்டாயம். சுற்றுலாப் பயணிகளுக்கும் கடுமையான நுழைவு கட்டுப்பாடுகள் உள்ளன.
கட்டாய ராணுவ சேவை மற்றும் அரசு கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை, அந்நாட்டை உலகின் மிகவும் மூடப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.