லூவ்ர் அருங்காட்சியக கொள்ளை – மேலும் 5 பேர் கைது
€88 மில்லியன் நகை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட 5 பேர் கைது
லூவ்ர் அருங்காட்சியக கொள்ளை - 88 மில்லியன் மதிப்புள்ள நகைகள் காணவில்லை
பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லூவ்ர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற €88 மில்லியன் (சுமார் ரூ. 890 கோடி) மதிப்புள்ள நகை திருட்டு வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாரிஸ் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கை புதன்கிழமை இரவு பாரிஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது என்று வழக்கறிஞர் லாரே பெக்கோவின் அலுவலகம் அறிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியும் அடங்குவதாக தெரியவந்துள்ளது
இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் தங்களின் “பகுதி அளவிலான தொடர்பை” ஒப்புக்கொண்டிருந்த நிலையில், புதிய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 19ஆம் திகதி நால்வர் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து வெளிச்சத்தில் நடந்த கொள்ளையில் €88 மில்லியன் மதிப்புள்ள அரிய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுவரை திருடப்பட்ட நகைகள் மீட்கப்படவில்லை என்று பெக்கோ RTL வானொலிக்கு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் டிஎன்ஏ சம்பவ இடத்துடன் பொருந்தி இருப்பதாகவும், அவர் கொள்ளை மேற்கொண்ட நால்வர் குழுவில் ஒருவராக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போலீசார், கொள்ளையில் நேரடியாக ஈடுபட்ட நால்வருக்கு அப்பாற்பட்டவர்களும் இந்த கும்பலில் இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். தற்போது விசாரணை நுணுக்கமாக நடைபெற்று வருவதால் கூடுதல் தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை. புதியதாக கைது செய்யப்பட்டவர்கள் நான்கு நாட்கள் வரை காவலில் வைக்கப்படலாம்.
முன்னதாக கைது செய்யப்பட்ட இருவர் 30 வயதிற்குட்பட்ட குற்றப் பின்னணியுடைய ஆண்கள் எனவும், அவர்கள் பவர் டூல்களைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்தின் அப்பொல்லோன் கேலரியில் நுழைந்து பிரெஞ்சு கிரீட நகைகளை திருடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவர்களில் ஒருவரை அல்ஜீரியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் கைது செய்ததாகவும், மற்றொருவர் பிரான்ஸிலேயே தங்கியிருந்ததாகவும் பெக்கோ விளக்கமளித்தார். இச்சம்பவம் அருங்காட்சியக ஊழியர்களுடன் தொடர்புடையதாக எந்த சான்றும் இதுவரை இல்லை என்றும் அவர் கூறினார்.
கொள்ளை நடந்த தினம் காலை 9.30 மணியளவில், அருங்காட்சியகம் திறந்தவுடன் நால்வரும் வந்தனர். திருடப்பட்ட வாகனத்தில் பொருத்தப்பட்ட மெக்கானிக்கல் லிப்டின் உதவியுடன் அவர்கள் சீன் நதிக்கரையோர பால்கனியில் நுழைந்து, கண்ணாடி காட்சிப்பெட்டிகளை வெட்டிப் பிளந்து நகைகளை எடுத்துச் சென்றனர்.
அவர்கள் மொத்தம் நான்கு நிமிடங்கள் மட்டுமே அருங்காட்சியகத்திற்குள் இருந்ததாகவும், காலை 9.38 மணிக்கு இரண்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றதாகவும், பின்னர் கார்கள் மூலம் கிழக்கு திசைக்கு பயணித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கொள்ளையின்போது யாரும் காயமடையவில்லை.
இச்சம்பவத்திற்குப் பிறகு பிரான்சில் உள்ள அனைத்து கலாச்சார நிறுவனங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், லூவ்ர் அருங்காட்சியகத்தின் அரிய நகைகள் தற்போது பிரான்ஸ் வங்கியின் 26 மீட்டர் ஆழமுள்ள பாதுகாப்புக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|