ரத்த வங்கியின் தவறால் 5 குழந்தைகள் HIV பாதிப்பு
சீமியா நோயாளி குழந்தைகளுக்கு HIV பரவி பரபரப்பு!
ஜார்க்கண்டில் தலசீமியா குழந்தைகளுக்கு மாசுப்பட்ட ரத்தம் ஏற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சைபாசா நகரில் ரத்த வங்கியின் அலட்சியத்தால் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து சிறுவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபாசா அரசு மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ஒருமுறை ரத்தம் ஏற்றும் சிகிச்சை நடைமுறையாக நடைபெற்று வந்தது. இதன் போது கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு 7 வயது சிறுவனுக்கு ரத்தம் மாற்றப்பட்ட பின் அவனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அந்தக் குழந்தை எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது வெளிச்சத்துக்கு வந்ததும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் குழந்தைக்கு மாற்றிய ரத்தம் சுத்தமாக பரிசோதிக்கப்படாமல், எச்.ஐ.வி. நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து மாநில அரசு விசாரணைக்குழுவை அமைத்து சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டது.
சுகாதார சேவைகள் இயக்குநர் தினேஷ் குமார் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையிலும் ரத்த வங்கியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பரிசோதனை முறைகளில் கடுமையான தவறுகள் நடந்துள்ளதாகவும், சில மாதிரிகள் சரியாக ஸ்க்ரீன் செய்யப்படாததும் தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில், அதே மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்ட மேலும் நான்கு தலசீமியா குழந்தைகளுக்கும் எச்.ஐ.வி. தொற்று உறுதியாகியுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் சைபாசா மட்டுமல்லாமல், முழு ஜார்க்கண்ட் மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், ரத்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரத்துறை தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|