முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் – ரணில் கைது
இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் ஜனாதிபதி கைது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இன்று (22) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவது என்பதில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க, 2022 ஜூலை மாதம் இலங்கையின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அப்போது கோட்டாபய ராஜபக்ச மக்கள் போராட்டங்களின் அழுத்தத்தால் பதவி விலகிய நிலையில், பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு 2024 செப்டம்பரில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருந்தாலும், தேர்தலில் தோல்வியடைந்தார். அதையடுத்து அநுர குமார திசாநாயக்க இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணில் கைது
ரணில் விக்ரமசிங்க, 2023 செப்டம்பரில் கியூபாவின் ஹவானாவில் நடைபெற்ற G77 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனில் தங்கியிருந்தார். இந்த பயணம் தொடர்பில் அவர் அரசுப் பணத்தை பயன்படுத்தியதாக CID குற்றஞ்சாட்டியுள்ளது.
மனைவி தன்னுடைய செலவைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாகவும், அரசுப் பணம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க விளக்கம் அளித்திருந்தார்.
ஆனால் CID, அவரது பயண செலவுகளும், உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளின் செலவுகளும் அரசின் நிதியில் இருந்து வழங்கப்பட்டதாக சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அந்தவகையில் இன்று காலை 9 மணியளவில் ரணில் விக்ரமசிங்க CID தலைமையகத்திற்கு வந்து வாக்குமூலம் அளித்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தனிச்செயலாளர் சந்திரா பெரேரா மற்றும் அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயக்க உள்ளிட்டோரிடமும் CID ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்திருந்தது.
இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இதுவரை முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. ரணில் விக்ரமசிங்க மீது CID எடுத்துள்ள இந்த நடவடிக்கை, நாட்டின் அரசியல் சூழ்நிலையை பெரிதும் பாதிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
அரசுப் பணத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் இந்த வழக்கு எதிர்காலத்தில் எந்த திசையில் நகரும் என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|