பிரான்ஸ் பிரதமர் லெகோர்னு ராஜினாமா!
பதவியேற்ற 26 நாளிலேயே அதிரடி முடிவெடுத்த பிரான்ஸ் பிரதமர்
அரசியல் குழப்பம் தீவிரம் – புதிய தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு
பிரான்சில் அரசியல் அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) திடீரென ராஜினாமா செய்துள்ளார். வெறும் 26 நாட்களே பிரதமராக இருந்த அவர், அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்றாததையே தனது ராஜினாமாவின் முக்கிய காரணமாக தெரிவித்துள்ளார்.
“இந்நிலையில நான் பிரதமராக தொடர இயலாது. அரசியல் கட்சிகள் எந்தவித சமரச மனப்பான்மையுமில்லாமல் நடந்துகொள்கின்றன,” என லெகோர்னு கூறியுள்ளார்.
திங்கள் காலை எலிசே அரண்மனையில் (Elysée Palace) அதிபர் இமானுவேல் மக்ரோனை (Emmanuel Macron) சந்தித்ததன் பின்னர் அவர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.
முன்னதாக பிரான்ஸ் பிரதமராக இருந்த பிரான்சுவா பய்ரூவின் (François Bayrou) அரசு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவரது அமைச்சரவை அமைப்பும் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. பல கட்சிகள் அவரது அரசுக்கு எதிராக வாக்களிப்பதாக எச்சரித்திருந்தன.
இதனால் தற்போது பிரான்சில் அரசியல் நிலைமை மீண்டும் குழப்பமானதாக மாறியுள்ளது. மக்ரோன் தற்போது மூன்று வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும் — புதிய பிரதமரை நியமிப்பது, தேசிய சபையை கலைத்து புதிய தேர்தலை நடத்துவது, அல்லது தானே பதவி விலகுவது. இதில் கடைசிப் பொறுப்பு சாத்தியமற்றதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடியும் பிரான்ஸ் அரசை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் கடன் உற்பத்தி மதிப்பின் 114% ஆக உயர்ந்துள்ளது, இது யூரோ மண்டலத்தில் கிரீஸ் மற்றும் இத்தாலிக்குப் பிறகு மூன்றாவது உயர்ந்த அளவாகும்.
லெகோர்னு தனது குறுகிய உரையில், “அரசியல் கட்சிகள் ஒவ்வொருவரும் தாமே பெரும்பான்மையுடன் இருப்பது போல நடந்து கொள்கின்றன. நானோ சமரசம் செய்ய தயாராக இருந்தேன், ஆனால் எவரும் தங்கள் திட்டங்களை முழுவதும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர்,” என்று கூறினார்.
2024 ஜூலையில் மக்ரோன் அழைத்த திடீர் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரான்சில் அரசியல் நிலைமை மிகவும் திடீர் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், புதிய சட்ட மசோதாக்கள் நிறைவேறுவதில் பெரும் சிரமம் நிலவுகிறது.
இந்தச் சூழலில், பிரான்ஸ் பங்குச்சந்தையும் திங்கள்கிழமை காலை அதிர்ச்சிகரமாக சரிந்தது. தற்போது, மக்ரோன் புதிய பிரதமரை நியமிப்பாரா அல்லது தேர்தலை அறிவிப்பாரா என்பது குறித்து நாடு முழுவதும் கவனம் திரும்பியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|