இரவில் முழிப்பு – உடல் தரும் எச்சரிக்கை அறிகுறி
மன அழுத்தம், ஹார்மோன் மாற்றம், மருத்துவ காரணங்கள் இரவு முழிப்புக்கு காரணம்
இரவில் அடிக்கடி முழிப்பு – உடல் தரும் எச்சரிக்கை சிக்னல்
இரவு நேரத்தில் அடிக்கடி விழித்தெழுதல் சிலருக்கு இயல்பாக தோன்றலாம். ஆனால் இது உடல் தரும் முக்கியமான சிக்னல் என்றும், அதை கவனிக்காமல் விட்டால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தூக்கத்தை கலைக்கும் காரணங்களில் முக்கியமானவை மன அழுத்தம் மற்றும் பதட்டம். தினசரி வேலைச்சுமை அல்லது சிந்தனைக் குழப்பங்கள் மூளை ஓய்வடையாமல் வைத்துவிடுகின்றன.
இதனுடன் சேர்த்து, படுக்கைக்கு முன் காப்பி அல்லது டீ போன்ற கஃபின் பானங்களை அருந்துவது, இரவு நேரத்தில் மொபைல் அல்லது லேப்டாப் பயன்படுத்துவது, தூக்க அட்டவணையை பின்பற்றாமல் இருப்பது ஆகியனவும் இரவில் அடிக்கடி எழச்செய்கின்றன.
மேலும், ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக மாதவிடாய் காலம் அல்லது மாதவிடாய் நிறுத்தம் போன்ற நிலைகள், தூக்கத்தை பாதிக்கக்கூடியவை. அதோடு, ஆசிட் ரிஃப்ளக்ஸ், ஆஸ்துமா, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் போன்ற உடல் நலக் குறைபாடுகளும் இரவு முழிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
தூக்கம் சீராக இல்லாததால் அடுத்த நாள் சோர்வு, எரிச்சல், கவனக் குறைவு, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
நீண்ட காலமாக இந்த பிரச்சனை தொடர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
இதைத் தவிர்க்க சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் உதவியாக இருக்கும்.
அதாவது, தினசரி ஒரே நேரத்தில் படுக்கும், எழும் பழக்கத்தை கடைபிடித்தல், இரவில் கனமான உணவுகளைத் தவிர்த்தல், கஃபின் பானங்களை குறைத்தல், படுக்கும் முன் மொபைல், டிவி பயன்படுத்தாமல் ஓய்வளிக்கும் செயல்களில் ஈடுபடுதல், மன அழுத்தத்தை குறைக்கும் தியானம் அல்லது யோகா செய்வது போன்றவை தூக்கத்தை மேம்படுத்த உதவும்.
அடுத்த முறை இரவில் அடிக்கடி முழிப்பு ஏற்பட்டால் அதை சாதாரணமாக எண்ணாமல், உடல் தரும் எச்சரிக்கை சிக்னலாக எடுத்துக்கொண்டு கவனம் செலுத்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|