அதிக இலாபம் தருவது தங்கமா? வெள்ளியா?
முதலீடு செய்வது குறித்து சிறிய தெளிவுபடுத்தல்
தற்போதைய காலகட்டத்தை உற்று நோக்கும் போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை மே 21 அன்று ரூ.1 லட்சத்தைக் கடந்திருந்தது. அப்போதிருந்து விலை ஒரு இலட்சத்தை ஒட்டியே நிலவி வருகிறது.
மறுபுறம் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 1 இலட்ச ரூபாயை நெருங்கிவிட்டது.
இது, எதிர்காலத்தில் இந்த இரண்டு உலோகங்களில் எது அதிக விலை உயரும் என்கிற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனி வரும் நாட்களில் தங்கத்தை விட வெள்ளி அதிக லாபம் கொடுக்க முடியுமா என்கிற கேள்வியும் உள்ளது.
இரண்டின் விலைகளின் ஒப்பீடு
வெள்ளி மிகவும் பயனுள்ள, தொழில் சார்ந்த உலோகம், ஆனால் தங்கத்தின் நிழலில் வெள்ளி இருட்டடிப்பு செய்யப்பட்டுவிடுகிறது.
வரலாற்று ரீதியாக 25 ஆண்டு தங்கம்-வெள்ளி விலை விகிதம் 68:1 என கருதப்படுகிறது. அதாவது தங்கத்தின் விலை வெள்ளியின் விலையைவிட தோராயமாக 68 மடங்கு அதிகரித்துள்ளது.
ஆனால் நிதிச் சேவைகள் நிறுவனங்களின் அறிக்கையின் படி, தங்கம் மற்றும் வெள்ளி இடையே தற்போதைய விலை நிலவரம் 102:1 ஆக உள்ளது. தற்போது தங்கத்தின் விலை வெள்ளியின் விலையை விட 102 மடங்கு அதிகமாக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை 1 இலட்சத்தை எட்டியுள்ள நிலையில் 10 கிராம் தங்கத்தின் விலையும் கிட்டத்தட்ட அதே அளவை நெருங்கிவிட்டது. அப்படியானால் வெள்ளி தற்போது குறைந்த அளவிலே விலையேறி வருகிறது.
அப்படியென்றால் இனி வரும் காலங்களில் அது அதிகரிக்க வாய்ப்பு அதிகம். தங்கத்தின் கொள்முதல், உலகளாவிய நிலையற்றதன்மை மற்றும் ஈடிஎஃப் (ETF) போன்றவற்றால் அதிகரித்து வருகிறது. மறுபுறம் வெள்ளியின் விலை 2025-ல் 12% அதிகரித்துள்ளது.
ஆனால் நாம் கடந்த 12 மாத கால நிலவரத்தை எடுத்துக் கொண்டால் தங்கத்தின் விலை 40% அதிகரித்துள்ள நிலையில் வெள்ளியின் விலை 15% அதிகரித்துள்ளது.
தங்கத்தின் எழுச்சி அக்டோபர் 2023-ல் இருந்து தொடங்கியது எனக் கூறலாம். அப்போது ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கத்தின் விலை 1,850 டாலராக இருந்தது.
மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்தில், இது 3,500 டொலராக உயர்ந்து 90% இலாபம் கொடுத்துள்ளது.
மறுபுறம் வெள்ளியின் எழுச்சி மெதுவாகவே இருந்து வருகிறது. பெப்ரவரி 2024 வரை வெள்ளியின் விலை மெதுவாகவே உயர்ந்து வந்தது. அதன் பிறகு வெள்ளியின் விலை 23 டொலரில் இருந்து 34 டொலராக உயர்ந்தது, அதாவது 48% இலாபம் கொடுத்துள்ளது.
கடந்த ஒரு வருட வளர்ச்சியைப் பார்க்கிறபோது அப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க 84.7 கிராம் வெள்ளி தேவைப்பட்டது. இப்போது ஒரு அவுன்ஸ் தங்கம் வாங்க 102 கிராம் வெள்ளி தேவைப்படுகிறது.
எதன் மூலம்அதிக வருமானம் ஈட்டலாம்?
சில முன்னணி முதலீட்டு வங்கிகளின் சமீபத்திய அறிக்கையில், தங்கத்தின் விலை புதிய வரலாற்று உச்சத்தைத் தொடலாம் எனத் தெரிவித்துள்ளது.
அவர்களின் கணிப்பின்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 3,359 டொலராக உள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் 3,700 டொலராக உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மந்தநிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,880 டொலரைத் தொடலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 2026-ன் நடுப்பகுதியில் தங்கம் 4,000 டொலரைத் தொடலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், தங்கம் அளவிற்கான இலாபத்தை வெள்ளியால் கொடுக்க முடியாது என நம்பிக்கையும் வெளியிட்டுள்ளது, ஏனெனில் உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தின் கொள்முதலை அதிகரித்து வருகின்றன.
கடந்த சில வருடங்களாக சூரிய மின் தகடுகளைத் தயாரிக்கவே வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மிகப்பெரிய உற்பத்தியாளரான சீனா, அதீத விநியோகத்தால் சமீபத்தில் ஒரு மந்தநிலையைச் சந்தித்து வருகிறது. எனவே வெள்ளியின் விலை தங்கத்தின் அளவிற்கு உயராது என அந்த முன்னணி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மறுபுறம், சந்தை நிபுணர்கள், வெள்ளியின் விலை சில காலமாக தேக்கநிலையிலே உள்ளது, தற்போது அது அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது என்கின்றனர்.
"நீண்ட காலமாக தங்கத்துடன் ஒப்பிடுகையில் வெள்ளி குறைவாகவே வளர்ந்து வருகிறது, எனவே அதில் ஏற்றத்திற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. வெள்ளிக்கான தேவை விநியோகத்தைவிட குறைவாகவே உள்ளது"
"கடந்த நான்கு வருடங்களாக உலகம் முழுவதும் வெள்ளிக்கான தேவை நன்றாகவே இருந்துள்ளது, ஆனால் வெள்ளியின் விலை தங்கத்துடன் ஒப்பிடுகையில் குறைவாகவே அதிகரித்துள்ளது".
மேலும் அவர், "உலகளாவிய நிலையற்றத்தன்மையின் போது, உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் மற்றும் அதிக வருமானம் உள்ள தனிநபர்களால் தங்கம் வாங்கப்படுகிறது, ஏனென்றால் இது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அதே வேளையில் வெள்ளியின் மதிப்பு என்பது தொழில்துறையின் தேவை அடிப்படையிலானது".
அமெரிக்க வர்த்தகப் போர் தீர்க்கப்பட்டு, உற்பத்தி மீண்டெழுந்தால் வெள்ளியின் விலை வேகமாக அதிகரிக்கலாம் என்று கூறும் அதேவேளை, "வெள்ளியின் அடிப்படை கூறுகள் (Fundamentals) மிகவும் வலுவானது, மற்றும் சூரிய மின் தகடுகள் மற்றும் மின்சார வாகனங்களின் உற்பத்தியில் அதன் தேவை இருந்து கொண்டே இருக்கும்" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளிக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்குமா?
தங்கத்திற்கான தேவை புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்றத் தன்மைக்கு மத்தியில் அதிகரிக்கிறது. ஆனால் வெள்ளிக்கான தேவை தொழில்துறை நோக்கங்களுக்கு அதிகமாக உள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி என்பது இரண்டு வெவ்வேறு வகையான உலோகங்கள்.
உலகில் நிலையற்றத்தன்மை இருக்கிற வரை தங்கத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.
தங்கம் ஒரு நாணயம் சார்ந்த உலோகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குகின்றன. மறுபுறம் வெள்ளி என்பது ஒரு தொழில்துறை சார்ந்த பொருள், எனவே அதிக அளவிலான கொள்முதல் என்பது இருக்காது.
மேலும் , தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வரலாற்று உச்சத்தில் இருப்பதால், இரண்டு உலோகங்களுக்கான தேவை மிகக் குறைவாக உள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் அதே சந்தர்ப்பத்தில், வெள்ளியில் அத்தகைய உயர்வுக்கான சாத்தியங்கள் குறைவு.
உலகத்தின் வெள்ளி தேவையில் 50% சூரிய மின் தகடுகள், மின்சார வாகனங்கள், மின்னணு மற்றும் 5ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்சார் நோக்கங்களுக்காகவே உள்ளது.
வெள்ளித் துறையை கண்காணிக்கும் சில்வர் இன்ஸ்டிட்யூட், 2025-ல் வெள்ளியின் தேவை 3% அதிகரித்து முதல்முறையாக 700 மில்லியன் அவுன்ஸை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.
வெள்ளியில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு சிறந்த வழி எது?
பொதுவாக மக்களுக்கு வெள்ளி உலோகங்களில் முதலீடு செய்வது என்பது ஒரு வழக்கமாகவே உள்ளது. அதாவது வெள்ளி நகைகள், வெள்ளிக் கட்டிகள் போன்றவை. ஆனால் இப்போது ஈடிஎஃப் வாய்ப்பு பிரபலமாகி வருகிறது.
ஆகவே,வெள்ளியில் முதலீடு செய்ய ஈடிஎஃப் தான் சிறந்த வழி.
வெள்ளி ஈடிஎஃபில், வெள்ளியைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்கிற கவலை கிடையாது, அவற்றை வாங்குவதிலும் விற்பதிலும் வெளிப்படைத்தன்மை உள்ளது மற்றும் வரியும் குறைவு.
வெள்ளி உலோக வடிவத்தில் வாங்கினால் அவற்றை விற்கின்றபோது சந்தை விலையை விட குறைவான விலையே கிடைக்கும்.
ஆனால் ஈடிஎஃப் சேமித்து வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, அதனால் செலவும் குறைவு மற்றும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாங்கி விற்க முடியும்.
எனினும் ஈடிஎஃப் மூலம் வெள்ளியில் முதலீடு செய்கிறபோது மேலாண்மை கட்டணம் மற்றும் செலவு விகிதங்கள் (expense ratios) போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது.