Home>உலகம்>ஜமைக்காவை தாக்கும் ம...
உலகம்

ஜமைக்காவை தாக்கும் மெலிசா புயல்

byKirthiga|11 days ago
ஜமைக்காவை தாக்கும் மெலிசா புயல்

மிகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 5ஆம் வகை புயல் – மக்கள் வெளியேற்ற உத்தரவு

ஜமைக்காவை தாக்கவுள்ள பேரழிவு புயல் மெலிசா – தீவு முழுவதும் அவசர நிலை அறிவிப்பு!

ஜமைக்காவை தாக்கவுள்ள ஆண்டின் மிக வலிமையான புயலான “மெலிசா” குறித்து அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் “மிகவும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதும், உயிருக்கு ஆபத்தான காற்று, பெருவெள்ளம் மற்றும் கடல்சுழி அலைகளை உருவாக்கக்கூடியது” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மணி ஒன்றுக்கு 175 மைல் (282 கிமீ) வேகத்தில் வீசும் காற்றுடன், “மெலிசா” புயல் தற்போது 5ஆம் வகை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது புயல்களில் அதிகபட்ச வலிமை கொண்ட வகையாகும். இந்த புயல் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜமைக்கா தீவில் கரைதொட்டுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளையில், இந்த புயலின் காரணமாக ஹைட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசில் ஏற்கனவே நால்வர் உயிரிழந்துள்ளனர்.

வானிலை நிபுணர்கள் கூறுவதாவது, மெலிசா புயல் மிகவும் மெதுவாக நகர்வதால், நீண்ட நேரம் கனமழை பொழிய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் கொடிய வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய புயல் மையம் (NHC) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, காற்றின் அதிகபட்ச வேகம் மற்றும் மைய அழுத்தத்தின் அடிப்படையில், “மெலிசா” உலகளவில் இதுவரை உருவான மிக வலிமையான புயலாக உள்ளது.

அந்த மையம் திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு வெளியிட்ட எச்சரிக்கையில், “இன்று இரவும் நாளை அதிகாலையும் ஜமைக்காவில் உயிருக்கு ஆபத்தான புயல் காற்று, பெருவெள்ளம் மற்றும் கடல்சுழி அலைகள் ஏற்படும்” என்று தெரிவித்தது.

புயல் தற்போது ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் இருந்து தென்மேற்கே சுமார் 145 மைல் (233 கிமீ) தொலைவில் அமைந்துள்ளதாகவும், மணி 3 மைல் (6 கிமீ) வேகத்தில் “மேற்கு-வடமேற்கு” திசையில் நகர்வதாகவும் கூறப்பட்டது.

NHC துணை இயக்குநர் ஜேமி ரோம் கூறியதாவது: “இந்த மெதுவான நகர்வினால் உருவாகும் கனமழை ஜமைக்காவுக்கு பேரழிவை ஏற்படுத்தும்,” எனவும் எச்சரித்தார்.

அடுத்த நான்கு நாட்களில் ஜமைக்காவின் சில பகுதிகளில் 40 அங்குலம் (100 செ.மீ.) வரையிலும் மழை பெய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜமைக்கா அரசு தலைநகர் கிங்ஸ்டனின் சில பகுதிகளில் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. தீவு முழுவதும் “அபாயம் நிலவும் பகுதி” என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி-க்கு அளித்த பேட்டியில் ஜமைக்கா கல்வி அமைச்சர் டேனா மோரிஸ் டிக்சன் கூறியதாவது: “இது நாங்கள் இதுவரை பார்த்திராத அளவுக்கு சக்திவாய்ந்த புயல். அக்டோபர் முழுவதும் மழை பெய்ததால் நிலம் ஏற்கனவே ஈரப்பதம் நிறைந்துள்ளது. இதற்கு மேலும் கனமழை சேர்வதால் பெரும் வெள்ளமும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்படலாம்” என தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: “881 தங்குமிடங்களை நாங்கள் தயாராக வைத்துள்ளோம். அவை அனைத்தும் பொதுமக்களுக்கு இலவசம்.”

ஜமைக்காவின் வடக்குக் கடற்கரையில் தன் குடும்பத்துடன் தங்கியுள்ள லண்டன் வாசி எவாட்னி கேம்பெல் கூறியதாவது: “நாங்கள் தங்கியுள்ள வீடு முழுமையாக கான்கிரீட்டால் கட்டப்பட்ட, புயலைத் தாங்கக்கூடிய வீடு. நாங்கள் அயலவர்கள் நலமாக உள்ளனரா என்று பரிசோதித்து வருகிறோம். தென்கிழக்கு தாழ்வுபகுதிகளில் வசிக்கும் மக்களைப் பற்றித் தான் எனக்கு அதிகம் கவலை. அவர்கள் கொள்ளையடிப்பார்கள் என்ற பயத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுக்கின்றனர்,” என்றார்.

தென்கிழக்கு மலைப்பகுதியில் உள்ள ஹேக்லி கேப் நகரைச் சேர்ந்த 47 வயது ஆசிரியர் டேமியன் ஆண்டர்சன் கூறியதாவது: “சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி நாங்கள் வெளியேற முடியவில்லை. நாங்கள் மிகவும் பயந்துள்ளோம்,” என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ், தீவு முழுவதும் உள்ள ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்.

அவர் சமூக வலைதளமான X-இல் பதிவிட்டதாவது: “ஒவ்வொரு ஜமைக்காவாசியும் புயலுக்கு தயாராக இருக்கவும், வீட்டுக்குள் தங்கவும், வெளியேற்ற உத்தரவுகளை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இந்த புயலை எதிர்கொண்டு மீண்டும் வலிமையாக எழுவோம்,” என்று தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் குறைந்த நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். சில கிராமப்புறங்களில் பள்ளி பேருந்துகள் மூலமாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஹைட்டியில் குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளதாகவும், பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டொமினிக்கன் குடியரசில் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது, தலைநகர் சான்டோ டொமிங்கோவில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட 79 வயது முதியவரே உயிரிழந்ததாகவும், கடலில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளநீரில் சிக்கிய பலரை மீட்புக் குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்