இயர்பட்ஸ் பயன்பாடு – கேட்கும் திறனை சிதைக்கும் அபாயம்!
WHO-இன் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இயர்பட்ஸ் பாவணை பல சிக்கலை ஏற்படுத்தும்.
WHO எச்சரிக்கை – இயர்பட்ஸ் காரணமாக 2050இல் 250 கோடி பேர் காது கேளாமை பாதிப்பு?
earbuds மற்றும் headphones இன் தவறான பயன்பாடு காரணமாக, இன்றைய இளம் தலைமுறையினரிடையே காது கேளாமை என்பது ஒரு புதிய பெருந்தொற்றாகவே பரவி வருகிறது. இதன் தீவிரத்தைக் கொண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த வருடம் வெளியிட்ட அறிக்கையில் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 2.5 பில்லியன் மக்கள் ஒரு நிலைமட்டும் செவிவழி சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை
இந்த எச்சரிக்கையான கணிப்புகள், வளர்ந்த உலக நாடுகள் மட்டுமன்றி வளர்ந்து வரும் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இலங்கையில் கூட இளம் பெண்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின்மீது அதிகமான ஈடுபாடுள்ள இளைஞர்கள் தினமும் நேரம் கடந்து செல்லும் வரை இயர்பட்ஸ்களை காதில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது ஒருபுறம் “Private Space” என்ற பிம்பத்தைத் தரக்கூடியதாக இருக்கலாம், ஆனால் உடல்நல அடிப்படையில் ஒரு மோசமான பழக்கமாக மாறுகிறது.
சத்தங்களை அதிகரித்து, வழக்கமாக அதிக ஒலியில் கேட்பது நம் செவிக்குழாயின் நரம்புகளுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனிதக் காதில் உள்ள சிறிய நரம்புகள் தொடர்ந்து அதிக ஒலியின் தாக்கத்திற்கு உள்ளாகும்போது, அவை மெதுவாக செயலிழக்கத் தொடங்குகின்றன. இது தொடக்க கட்டத்தில் தவிர்க்க முடியாத நிலையில் தெரியாமல் போய், பின்னர் முற்றிலும் கேட்க முடியாத நிலையில் ஒருவரை கொண்டு செல்லும்.
இளம் வயதிலேயே இது ஆரம்பமானால், அந்த இளைஞரின் கல்வி, வேலை, சமூக உறவுகள் போன்றவை அனைத்திலும் சிக்கல்கள் உருவாகின்றன. பல இளம் பெண்கள் தொழிலில் ஈடுபட்டு வீடுகளில் தனியாக வேலை பார்க்கும் சூழ்நிலையிலும், இயர்பட்ஸ் பயன்படுத்துவது ஒரு வழக்கமாகிவிட்டது. இதனால் உடலில் உருவாகும் பிற மாற்றங்களையும் அவர்கள் கணிக்க முடியாமல் போகிறார்கள்.
இயர்பட்ஸ்கள் தவிர, மெட்ரோ நகரங்களில் இரவின் நேரங்களில் கூடக் கட்டுமான பணிகள், போக்குவரத்து இரைச்சல்கள் போன்றவை காது கேளாமையை தூண்டும் காரணிகளாக செயல் படுகின்றன. இவை அனைத்தும் சேர்ந்து ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தி, காதுகளில் இயல்பான அமைதியை சீர்குலைக்கும். Presbycusis எனப்படும் வயது காரணமான கேட்கும் திறன் குறைபாடு, இப்போது வாழ்க்கை முறை காரணமாகவே இளம் வயதில் வந்துவிடுகிறது.
WHO, இந்த நிலையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டுமெனில், குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் ஒரு முறை காது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. மேலும், குழந்தைகளின் கேட்கும் திறனை பாதுகாப்பது பெற்றோர்களின் முதல் பொறுப்பு ஆகும். குழந்தை பிறக்கும் போதே சில மருத்துவமனைகள் நவீன செவிச் சோதனைகளை செய்வது வழக்கமாக இருக்கிறது.
ஆனால் எல்லா இடங்களிலும் இது நடைமுறையிலில்லை. பல குழந்தைகளின் கேட்கும் திறன் பாதிப்பு, 3 அல்லது 4 வயதில் பேச முடியாமல் இருக்கும் போது தான் வெளிப்படுகிறது. இது தவிர, சில மருந்துகள் (Ototoxtic Drugs) கூட, செவிக்குழாயின் நரம்புகளை பாதிக்கக்கூடியவை. எனவே மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் பயன்படுத்தக் கூடாது.
WHO அறிக்கையில் மேலும், பாதுகாப்பான இசை கேட்கும் பழக்கங்கள், தடுப்பூசிகள், காது நோய்களுக்கு உடனடி சிகிச்சை, பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலம் 60 சதவீத காது கேளாமை பாதிப்புகள் தடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவீன உலகில் நம் உடலை பாதுகாக்கும் பொருட்டு டிஜிட்டல் சாதனங்களை நாம் கட்டுப்படுத்திக் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரமிது. நீண்ட நேரம் இயர்பட்ஸ் அல்லது ஹெட்ஃபோன் பயன்படுத்தும் பழக்கம், வெறும் உடல்நல பாதிப்பு மட்டுமல்லாமல், நம் சமூக உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பரவலான பிரச்சனையாக வேரூன்றியுள்ளது. அதனால் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.