காசா நோக்கி சென்ற படகுகளை இஸ்ரேல் தடுத்து வைப்பு
37 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் காவலில்
காசா முற்றுகை முறியடிக்க 30க்கும் மேற்பட்ட படகுகள் தொடர்ந்து புறப்பாடு
காசா மீது இஸ்ரேல் விதித்துள்ள முற்றுகையை முறியடிக்க முயன்ற உலகளாவிய “சுமூத் படகு இயக்கம்” (Global Sumud Flotilla) சார்ந்த 13 படகுகளை இஸ்ரேல் கடற்படை தடுத்து வைத்துள்ளது. இதில் 37 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்கத்தின் பேச்சாளர் சைஃப் அபூகேஷேக் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “மிஷன் அப்டேட்” வெளியிட்டுள்ளார். அதில், ஸ்பெயின் – 30 பேர், இத்தாலி – 22 பேர், துருக்கி – 21 பேர், மலேசியா – 12 பேர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் படகுகளில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
அபூகேஷேக் மேலும், “எங்கள் பணி தொடர்கிறது. கைது செய்யப்பட்டாலும், எங்கள் படகுகள் இன்னும் மெடிட்டரேனிய கடல் வழியாக காசா கடற்கரையை அடைய போராடிக் கொண்டிருக்கின்றன. தற்போது சுமார் 30க்கும் மேற்பட்ட படகுகள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கடற்படை தடைகளை எதிர்கொண்டு பயணம் மேற்கொண்டு வருகின்றன. அவர்கள் உறுதியுடனும் ஊக்கத்துடனும் செயல்பட்டு வருகின்றனர். அதிகாலை நேரத்திற்குள் முற்றுகையை முறியடித்து ஒன்றாக காசாவை அடைவதே அவர்களின் இலக்கு,” என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் கடற்படை தடுத்து வைத்துள்ளவர்களின் நிலைமை தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நடவடிக்கை சர்வதேசளவில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.