Home>விளையாட்டு>நியூசிலாந்து கேப்டன்...
விளையாட்டு (கிரிக்கெட்)

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு

byKirthiga|6 days ago
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஓய்வு

டி20இல் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் – புதிய தலைமுறைக்கு வாய்ப்பு

கேன் வில்லியம்சன் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிக அமைதியான தலைவர்களில் ஒருவருமான கேன் வில்லியம்சன் தனது டி20 சர்வதேச கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2011ஆம் ஆண்டு டி20இல் அறிமுகமான அவர், இதுவரை 2575 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 33 ரன்கள், 18 அரைசதங்கள், மேலும் அதிகபட்சமாக 95 ரன்கள் எனும் சாதனையுடன் வில்லியம்சன் நியூசிலாந்துக்காக இரண்டாவது அதிக ரன் சேர்த்த வீரராக உள்ளார்.

மொத்தம் 75 போட்டிகளில் கேப்டனாக பணியாற்றிய வில்லியம்சன் தலைமையில், நியூசிலாந்து 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு சென்றது. மேலும் 2021ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ரன்னர்ஸ்-அப் எனும் பெருமை பெற்றது.

35 வயதான வில்லியம்சன், “நான் நியூசிலாந்துக்காக டி20 கிரிக்கெட் விளையாடியதை மிகவும் ரசித்தேன். ஆனால் தற்போது அணியின் எதிர்காலத்திற்காக இது சரியான நேரம் என நினைக்கிறேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அணி உலகக் கோப்பைக்காக தயாராகட்டும்” எனக் கூறினார்.

அவர் மேலும், “மிட்ச் சாண்ட்னர் தற்போது நல்ல தலைமைத்துவத்துடன் அணியை வழிநடத்துகிறார். அவர்களே இனி இந்த வடிவில் அணியை முன்னேற்ற வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

வில்லியம்சன் இன்னும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாகவும், வரும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும், அவர் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு லீக்குகளில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்