உணவில் சேர்க்க வேண்டிய உப்பின் அளவு
சிறுநீரக ஆரோக்கியம் குறித்த சிறிய விளக்கம்
"சிறுநீரகம் சார்ந்த நோய்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்சனைகள், மற்றொன்று தடுக்க இயலாத சிறுநீரக பிரச்சனை.
தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், நம்முடைய வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகின்றன. அதில், முதன்மையாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய வாழ்வியல் நோய்களால் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன.
இவற்றை நாம் தடுக்க முடியும். ஆனால், மரபியல் ரீதியாக ஏற்படும் சிறுநீரக பிரச்னைகளை நாம் தடுக்க முடியாது." "ஆரம்பத்தில் நாம் வேட்டையாடும் சமூகங்களாக இருந்தோம். அதன்பின், வேளாண்மை செய்ய ஆரம்பித்தோம். இப்போது, கடைகள், ஹோட்டல்களில் சாப்பிட ஆரம்பித்து, வீட்டுக்கே இன்று உணவு வருகின்றது.
துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோம். இப்படியான சூழலில் நம் உடலுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து உண்ண வேண்டும். அதுதான், நம் சிறுநீரகங்களை காப்பதற்கு நாம் செய்யும் அதிகபட்ச தடுப்பு வழியாக இருக்கும்,".
சிறுநீரக ஆரோக்கியம் என்று வரும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உப்பு, சர்க்கரையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். "ஏனெனில், நீங்கள் ஒரு டயாலிசிஸ் பிரிவுக்கு செல்வதாக எடுத்துக்கொள்வோம். அங்குள்ள சிறுநீரக நோயாளிகளுள் 70% மேல் நீரிழிவு நோயாளிகளாகவே இருப்பார்கள்."
நாள் ஒன்றுக்கு உணவில் உப்பு எவ்வளவு சேர்க்கலாம்?
உப்பை பொறுத்தவரையில் 5 கிராம்தான் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. ''ஒரு சிறிய டீஸ்பூன் அளவுக்கான உப்பைதான் தினமும் எடுக்க வேண்டும். அதுதவிர, நாம் அப்பளம், ஊறுகாய், ஃபிரெஞ்சு ஃப்ரை, சிப்ஸ், பிஸ்கெட், பிரெட் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் என, தேவைக்கு மிக அதிகமாக உப்பை எடுத்துக்கொள்கிறோம்.
பதப்படுத்துவதற்காகத்தான் நாம் ஆரம்பத்தில் உப்பை பயன்படுத்தினோம், உப்பின் பயன்பாடு ஆரம்பத்தில் சுவையை அதிகப்படுத்துவது அல்ல. எனவே, நம்மால் எவ்வளவு உப்பை குறைக்க முடியுமோ அவ்வளவையும் குறைக்க வேண்டும்''.
கர்ப்பமாக இருக்கும் பெண் ஒருவர் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை, உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், இது இரண்டும் கருவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ''அதுமட்டுமல்லாமல், ஒரு குழந்தைக்கு உப்பே இல்லாமல் உணவைப் பழக்க வேண்டும்.
குழந்தைகளின் சுவை நரம்பை உப்பு, சர்க்கரை சுவைக்கு மட்டும் பழக்காமல், அதன் உண்மையான சுவைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பருவத்திலே இதை பழக்கினால் எளிது. இல்லையென்றால், 40 வயதில் ஒருவர் உப்பு, சர்க்கரையை கைவிடுவது கடினமாக இருக்கும்.''
தண்ணீர் எவ்வளவு அருந்த வேண்டும்?
''ஒருவர் தேவையான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். சிறுநீரக கல், சிறுநீரக கட்டிகள் உள்ளவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். ஆனால், சிறுநீரக பிரச்னை ஏற்பட்டவுடன், அதை சரி செய்கிறோம் என்ற பெயரில் தண்ணீரை நாமே அதிகமாகக் குடிக்கக் கூடாது,
அப்போது மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்படும். ஒரே நாளில் இடைவெளி விட்டு விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்கக் கூடாது.
ஒரு ஆரோக்கியமான நபர் சாதாரணமான நாட்களில் 3 லிட்டர் வரையும் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் 4 லிட்டர் வரையும் தண்ணீர் அருந்த வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்னென்ன?
சிறுநீரக பிரச்னை பெரும்பாலும் அறிகுறிகளே காண்பிக்காது. ஒருவேளை சிறுநீரில் புரதம் வெளியேறினால், சிறுநீர் நுரை, நுரையாக வரலாம். இரத்தம் வெளியேறினால் சிவப்பாக இருக்கும். கல் இருந்தால் முதுகு பின்பகுதியில் இருபுறமும் வலி ஏற்பட்டு அது, சிறுநீர் வெளியேறும் பாதைக்கு பரவும்.
சிறுநீரில் கிரியேட்டினின் அதிகமாக இருப்பது அறிகுறிகளில் தெரியாது. கடைசி நிலையில்தான் கால் வீக்கம் ஏற்படும்.
சிறுநீர் வாயிலாக வெளியே செல்லக்கூடிய பொருட்கள் வெளியேறாமல் அதனுள்ளேயே இருப்பதுதான் கிரியேட்டினின் (creatinine) ஆகும்.
சிறுநீரக செயலிழப்பில் அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. கால் வீக்கம் இருக்கலாம், சிறுநீர் குறைவாக வெளியேறலாம், நோய் கொஞ்சம் தீவிரமாகும்போது மூச்சுத்திணறல், இரத்தசோகை, பசியின்மை ஏற்படலாம். அந்த அறிகுறிகளே தீவிர நிலையில்தான் தென்படும்.
தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வது, வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் இரத்த அழுத்தமும் சில சந்தர்ப்பங்களில் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரக பாதிப்புகளை எப்படி கண்டுபிடிப்பது?
நாள்பட்ட சிறுநீரக நோய் (chronic kidney disease - CKD) தான் சிறுநீரக பிரச்னையின் தீவிர நிலையாக கருதப்படுகிறது. இதில் ஐந்து கட்டங்கள் உள்ளன.
கிரியேட்டினின் அளவை வைத்துதான் ஒருவர் எந்த கட்டத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன் அளவு உயர்ந்தால் எந்தளவுக்கு நோய் தீவிரமாக உள்ளது என்பதை கூற முடியும்.
ஐந்தாம் கட்டம் என்றால் கிட்டத்தட்ட இறுதி நிலை எனலாம். அதாவது, சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்துவிட்டது என அர்த்தம். அப்போது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது தீர்வாக இருக்கும்.
நிரந்தரமான சிறுநீரக நோயாக மாறிவிட்டால் அதை முழுவதும் குணப்படுத்த முடியாது. தற்காலிகமாக ஏற்படும் பிரச்னைகளை மட்டுமே சரிசெய்ய முடியும்.
கிரியேட்டினின் அளவை வைத்து 'கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்' (Glomerular filtration rate) என்பதை அளவிடுகின்றனர். அதாவது, கிரியேட்டினின் அளவையும் நோயாளியின் வயதையும் வைத்து இதன் மதிப்பை அளவிடுகின்றனர்.
அதன் அளவு 90க்கு மேல் இருந்தால் பிரச்னையல்ல, 90 மி.லி.க்கு கீழ் இருந்தால் நாள்பட்ட சிறுநீரக நோய் என்பதை உறுதிசெய்யப்படும். 15 மி.லி.க்கு கீழே சென்றால் இறுதி நிலை நாள்பட்ட சிறுநீரக நோய் எனப்படும்.
40 வயதுக்கு மேல் எல்லோருக்கும் ஜி.எஃப்.ஆர்(கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்) அளவு குறையும். ஆனால், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இதன் அளவு ஆண்டுக்கு 5 மி.லி. என்ற அளவில் குறைகிறது.
ஆரம்ப நோய்நிலையில், இதன் அளவு குறைவதை சற்று மாற்றியமைப்பதற்கான மாத்திரைகள் வழங்கப்படும்.
தொழிலாளர்களுக்கு சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது ஏன்?
தொழிலாளர்கள் வெயிலில் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் போதுமான அளவில் அருந்த மாட்டார்கள். கழிவறை வசதி இல்லையென்றால் தண்ணீர் போதுமான அளவில் குடிக்க மாட்டார்கள்.
எனவே, அவர்களுக்கு சுகாதாரமான கழிப்பட வசதியையும் போதுமான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.
என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும்?
கிரியேட்டினின் அளவை பரிசோதிப்பதற்கான இரத்தப் பரிசோதனை மற்றும் இரத்தம் வெளியேறுகிறதா என்பதை சோதிக்க இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அல்டிராசவுண்ட் மூலம் சிறுநீரகம் எப்படி இருக்கிறது, அதன் அளவு சரியாக இருக்கிறதா, கல், கட்டி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும்.
மேலும், "டைப் 1 நீரிழிவு நோயாக இருந்தால் ஆரம்பத்திலேயே தெரியும், ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் எப்போதாவது பரிசோதிக்கும் போதுதான் தெரியும். ஆனால், நீரிழிவு நோய் எப்போதிலிருந்து இருக்கிறது என்பது தெரியாது. எனவே, நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படும் போதே சிலருக்கு சிறுநீரக நோய் இருக்கலாம்."
என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்?
நீரிழிவு நோய், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன மாதிரியான சரிவிகித உணவுமுறையை கடைபிடிக்கிறோமோ அதுவே நம் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் முக்கியம்.
"வாஸ்குலார் (இரத்த நாளங்கள் தொடர்பான) நோய்களைத் தடுக்க பொட்டாசியம் எடுக்க வேண்டும், அதுவே சிறுநீரக பிரச்னை வந்துவிட்டால் பொட்டாசியம் சம்மந்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உப்பை கூடுமானவரை குறைக்க வேண்டும். மேலும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்டி ஆக்ஸிடென்ட், நிறைந்த, கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்." என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.