Home>இந்தியா>பூடானில் இருந்து சொ...
இந்தியா

பூடானில் இருந்து சொகுசு கார் கடத்தி விற்பனை!

byKirthiga|29 days ago
பூடானில் இருந்து சொகுசு கார் கடத்தி விற்பனை!

துல்கர் சல்மான், பிரித்விராஜ் வீடுகளில் சோதனை - கடத்தல் வலை

பூடானில் இருந்து சொகுசு கார் கடத்தி நடிகர்களுக்கு விற்பனை – கோவை கும்பல் மீது அமலாக்கத்துறையின் சோதனை

இந்தியாவின் அண்டை நாடான பூடானில் இருந்து லேண்ட் ரோவர் உள்ளிட்ட சொகுசு பழைய கார்கள் இந்தியாவிற்கு அனுமதியின்றி கடத்தி வந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டதாக சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து “ஆபரேஷன் நும்கோர்” என்ற பெயரில் கேரளாவில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோரின் வீடுகளில் இருந்து மொத்தம் 39 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் நடந்ததாகக் கூறி அமலாக்கத்துறையினர் சென்னையில் துல்கர் சல்மான் வீடு மற்றும் கோவை, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட 17 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். அதேபோல் நடிகர் பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள், வாட்ஸ்அப் செய்தித் தொடர்புகள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கடத்தல் செயல்பாட்டில் கோவைதான் “மூளை” போல செயல்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே கார்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இவை அனைத்தும் “விண்டேஜ்” எனப்படும் பழைய மாடல்கள் என்பதால் இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்றன. அதனால் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் அவர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பூடானில் முன்னாள் ராணுவ அதிகாரி ஷா கின்லே மூலம் கார்கள் வாங்கப்பட்டதாகவும், 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் மட்டும் போலியான NOC ஆவணங்களைப் பெற்று மொத்தம் 16 வாகனங்கள் ஜெய்காவ்ன் எல்லை வழியாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்குள் வந்தவுடன், இறக்குமதி வரி செலுத்தாமல், கண்டெய்னர்களின் மூலம் பல மாநிலங்களுக்கு வாகனங்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனங்களுக்கான தொகை ஹவாலா வழியாக பூடானுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

மேலும், கடத்தப்பட்ட வாகனங்கள் கோவை கும்பலால் OLX மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்த ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகள் அடிப்படையில், அன்னியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிமீறல்கள் நிகழ்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கேரளா முழுவதும் பல வாகன வொர்க்ஷாப்புகளும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்றன. கார்களைப் பிரித்து உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் பல முக்கிய நபர்கள் விரைவில் சிக்குவார்கள் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்