ரங்கராஜ் – கிரிசில்டா விவகாரத்தில் புதிய திருப்பம்
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா புகார் – விசாரணை நீடிக்கிறது
மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா சர்ச்சை : மகளிர் ஆணைய விசாரணையில் புதிய திருப்பம்
திருமண மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகார் தொடர்பாக மகளிர் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணை புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மகளிர் ஆணைய அலுவலகத்தில் இருவரும் நேரில் ஆஜராகிய நிலையில், ஆணையத் தலைவர் குமாரி சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் ஜாய் கிரிசில்டா மற்றும் ரங்கராஜ் இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்து ஆணையம் விவரங்களை கேட்டறிந்தது. பின்னர் தனிப்பட்ட முறையில் ரங்கராஜிடமிருந்து கூடுதல் விளக்கங்கள் பெறப்பட்டன. விசாரணை முடிவில், ரங்கராஜ் மீண்டும் அக்டோபர் 29ஆம் திகதி ஆணையத்திற்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் இருந்து அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கிறார் என வழக்கறிஞர் தெரிவித்தார். அதேசமயம், ஜாய் கிரிசில்டா தரப்பில் இருந்து சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரங்கராஜ், “பிரச்சனை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க முயன்றதாக” கூறியிருந்தது தவறானது எனவும், அந்த அறிக்கையை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற வேண்டும் என நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அறிக்கையில் குறிப்பிட்ட “தன்னை அணுகியவர்கள் யார்” என்ற விவரங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா சர்ச்சை இன்னும் நீடிக்கிறது. இருவரும் தங்கள் தரப்பில் உறுதியுடன் இருந்து வருவதால், அடுத்த கட்ட விசாரணை மிக முக்கியமானதாக அமைய வாய்ப்பு உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|