மஸ்கெலியா தொழிற்சாலை தீ – தொண்டமான் நடவடிக்கை
தீ விபத்துக்குப் பிறகு தொழிலாளர்களுக்காக கம்பனியுடன் பேசிய தொண்டமான்
தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க ஒப்புக்கொண்ட கம்பனி
மஸ்கெலியாவில் உள்ள லக்சபான தோட்டத்தின் வாழமலை பிரிவில் அமைந்திருந்த தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலையின் முக்கிய உற்பத்தி பிரிவுகள் தீயில் முற்றாக எரிந்த நிலையில், சம்பவம் தொடர்பாக பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இன்று சம்பவ இடத்துக்கு வருகை தந்து, கம்பனி நிர்வாகத்துடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினார்.
தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பதைப் பற்றி முழுமையான விசாரணை மேற்கொண்டு, விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் கம்பனி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தீயால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலையை மீண்டும் கட்டமைக்கும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமெனவும், தற்போது பணியின்றி இருக்கும் சுமார் 80 தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் திறக்கும் வரை மாற்று வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அவரது கோரிக்கைக்கு கம்பனி நிர்வாகம் இணக்கம் தெரிவித்ததோடு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு இடைக்கால உதவி நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதியளித்தது.
மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை தீ விபத்து தொடர்பான விசாரணை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|