அது என் குழந்தை தான் - மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிசில்டா வழக்கில் மாதம்பட்டி ரங்கராஜ் சிக்கல்
திருமணமும் குழந்தையும் குறித்த குற்றச்சாட்டில் ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கை பரிந்துரை
பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையம் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா அளித்த புகாரின் பேரில் இது உருவாகியுள்ளது.
ஜாய் கிரிசில்டா கடந்த ஆண்டு தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். தங்களது திருமணத்திற்கான ஆதாரங்களும், கர்ப்பம் தரித்த பின்னர் அவர் தன்னை விட்டு விலகியதும் தொடர்பான ஆதாரங்களையும் மகளிர் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கில் இருமுறை விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆஜரானார். விசாரணை முடிவில், ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பதிவில், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடன் இருந்த உறவையும், திருமணத்தையும், குழந்தை தன்னுடையது என்பதையும் மகளிர் ஆணைய விசாரணையில் ஒப்புக்கொண்டார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் ஜாய் கிரிசில்டா ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர், “ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ், அப்பாவின் முகத்தையே உரித்தது போல இருக்கிறார்” எனக் குறிப்பிட்டு குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த வழக்கு தற்போது மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் மேல்நிலை விசாரணையில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|