நிலா சென்றது பொய் - கிம் கார்டாஷியனுக்கு NASA பதிலடி
“நாங்கள் நிலாவிற்கு சென்றோம்” – NASA தலைவர் கிம்-க்கு பதில்
நிலா பயணம் பொய்யென கூறிய கிம் கார்டாஷியனின் கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது
உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்ட கிம் கார்டாஷியனின் சமீபத்திய கருத்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவையே விளக்கம் அளிக்கச் செய்துள்ளது. ஹுலூ தொலைக்காட்சி தொடரான “The Kardashians” நிகழ்ச்சியில், கிம் கார்டாஷியன் 1969ஆம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் அபோலோ 11 நிலா பயணம் உண்மையில் நிகழவில்லை என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் அளித்ததாகக் கூறப்படும் ஒரு வீடியோவைப் பார்த்த பிறகே தமக்கு சந்தேகம் தோன்றியதாகவும், அதில் ஆல்ட்ரின் கூறியதைக் கேட்டு “நிலா பயணம் நடந்ததே இல்லை” என நினைத்ததாகவும் தெரிவித்தார்.
1970களிலிருந்து சிலர் நிலா பயணம் போலியாக படமாக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்து வந்தனர். ஆனால் இந்த கூற்றுக்கு நாசா தற்காலிக நிர்வாகியாக உள்ள அமெரிக்க போக்குவரத்து செயலாளர் சான் டஃபி உடனடியாக பதிலளித்தார்.
அவர் X (முன்னாள் Twitter) தளத்தில் எழுதியதில், “ஆம், @KimKardashian, நாங்கள் நிலாவுக்கு ஏற்கனவே ஆறு முறை சென்றிருக்கிறோம்!” எனக் குறிப்பிட்டார். மேலும், “நாங்கள் நிலாவுக்கு மீண்டும் செல்வதற்கான தயாரிப்பில் உள்ளோம். 2026ஆம் ஆண்டு அர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி மிஷன் நிலாவைச் சுற்றி 10 நாள் பயணம் மேற்கொள்ளும், பின்னர் 2027இல் நிலா தரையிறக்கம் திட்டமிடப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும், “முன்னைய விண்வெளிப் போட்டியை நாம் வென்றோம், இதையும் நிச்சயம் வெல்வோம்” என கூறியுள்ளார்.
கிம் கார்டாஷியன் குறிப்பிட்ட வீடியோவின் உண்மையான பின்னணி பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது. 2015ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் யூனியனில் நடந்த விவாத நிகழ்வில், ஒருவர் ஆல்ட்ரினிடம் “அபோலோ பயணத்தின் போது மிகப் பயங்கரமான தருணம் எது?” எனக் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டு, “அப்படி எதுவும் நிகழவில்லை” என நகைச்சுவையாகப் பதிலளித்தார். ஆனால் கிம், அந்த வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டதாகத் தெரிகிறது.
இந்த சம்பவத்துக்கான விளக்கம் தொடர்பாக நாசா, ஆல்ட்ரின் மற்றும் கிம் கார்டாஷியன் ஆகியோரின் பிரதிநிதிகள் உடனடி பதில் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் “நிலா பயணம் உண்மையா?” என்ற பழைய விவாதத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|