Home>ஆன்மீகம்>பாரம்பரியமும் பக்திய...
ஆன்மீகம்

பாரம்பரியமும் பக்தியும் இணைக்கும் நவராத்திரி விழா

byKirthiga|about 2 months ago
பாரம்பரியமும் பக்தியும் இணைக்கும் நவராத்திரி விழா

கொலு அமைப்பின் ஆன்மீக ரகசியங்களுடன் நவராத்திரியின் சிறப்பு

நவராத்திரி – பெண்களின் வாழ்வில் ஒளியூட்டும் விழா

இந்துமதத்தில் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் நவராத்திரி, பெண் தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது நாட்கள் கொண்ட பண்டிகையாகும்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் தொடங்கும் இந்த விழா, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளை வழிபடும் சிறப்பான காலமாகக் கருதப்படுகிறது.

நவராத்திரியின் ஆன்மீக முக்கியத்துவம்

புராணக் கதைகளின் படி, மகிஷாசுரனை அழிக்க அம்பாள் ஒன்பது நாட்கள் விரதமிருந்து தன் சக்தியை வளர்த்துக்கொண்டதாக நம்பப்படுகிறது. அதன் நினைவாகவே இன்று மக்கள் இந்த ஒன்பது நாட்களையும் பூஜை செய்து, தெய்வங்களை வணங்குகின்றனர்.

முதல் மூன்று நாட்களில் துர்க்கையை வணங்குவதன் மூலம் தைரியம் மற்றும் சக்தி, அடுத்த மூன்று நாட்களில் லட்சுமியை வழிபடுவதால் செல்வ வளம், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை வணங்குவதன் மூலம் ஞானம் மற்றும் கல்வி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

கொலு அமைக்கும் விதம்

நவராத்திரி காலத்தில் வீடுகளில் கொலு அமைத்து பூஜை செய்வது பாரம்பரியமாக உள்ளது. ஒற்றை எண் படிகளில் (ஐந்து, ஏழு, ஒன்பது) பொம்மைகள் வைக்கப்பட வேண்டும். கொலுவில் தெய்வங்கள், முனிவர்கள், மும்மூர்த்திகள், நவக்கிரகங்கள் மற்றும் சமூக நலனுக்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் வைக்கப்படும். இது சாமர்த்தியம், செல்வம், ஞானம் ஆகியவை வீட்டில் நிலைத்திருக்கக் காரணமாகும்.

பெண்களுக்கான சிறப்பு பண்டிகை

நவராத்திரி பெண்களுக்கான பண்டிகையாகவே பார்க்கப்படுகிறது. இந்த நாட்களில் சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து, ஒன்றாக பூஜை செய்வது, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கயிறு வழங்குவது வழக்கம். இதனால் பெண்களுக்கு நீண்ட ஆயுள், செல்வம், சந்தோஷம் மற்றும் குடும்ப வாழ்வில் நல்ல நிலை கிடைக்கும் என நம்பப்படுகிறது.

பூஜை நேரம்

ஒன்பது நாட்களிலும் காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 6 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்வது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. அம்பிகையை பக்தியுடன் வழிபட்டால் எதிரிகள் விலகி, கடன் பிரச்சினைகள் நீங்கி, திருமண தடை நீங்கி, குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பப்படுகிறது.

சிவனுக்கான சிறப்பு தினம் சிவராத்திரி எனில், சக்திக்கு உரிய பண்டிகை நவராத்திரி. பெண்களின் வாழ்வில் ஆன்மீக ஒளியூட்டும் இந்த விழாவை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

வழிபாட்டின் மூலம் பெண் தெய்வங்களின் அருளும், குடும்ப வளமும், வாழ்வில் முன்னேற்றமும் பெற்று வாழ முடியும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்