புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (02.11.2025) காலை அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று (01.11.2025) மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காலை 8.30 மணியளவில் அது அதே பகுதியில் நிலவியதாகவும், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் மற்றும் பங்களாதேஷ் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக இன்று (02.11.2025) மற்றும் நாளை (03.11.2025) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 4 முதல் 8 வரை மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான முன்னறிவிப்பில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°C மற்றும் குறைந்தபட்சம் 27°C வரை இருக்கும் எனவும், நாளையும் இதே வானிலை நிலை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|