நியூசிலாந்தில் புதிய குடியுரிமை பாதைகள் அறிவிப்பு
திறமையான குடியேற்றத்தாருக்கு வசதிகளை எளிதாக்கிய நியூசிலாந்து
"பணியாளர் பற்றாக்குறையை சரி செய்யும் முயற்சி" – அமைச்சர்
நியூசிலாந்து அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய குடியுரிமை பாதைகளை (Residency Pathways) அறிவித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி அமைச்சர் நிக்கோலா வில்லிஸ் அளித்த அறிக்கையில், திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த குடியேற்றத்தார், நியூசிலாந்தின் பணியாளர் பற்றாக்குறையை நிறைவு செய்வதிலும், உள்ளூர் தொழில்கள் வளர்ச்சியடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும், "சில குடியேற்றத்தாருக்கு குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்கள் அத்தியாவசிய திறன்களும், சிறந்த அனுபவமும் பெற்றிருந்தாலும், உள்ளூர் பணியாளர்களால் நிரப்ப முடியாத துறைகளில் திறமைகளை கொண்டிருந்தாலும் அவர்கள் குடியுரிமைக்கு தகுதி பெற முடியவில்லை. இப்போது அதனை எளிதாக்குகிறோம்" என்றார்.
புதிய நடைமுறையின் படி, திறமையான தொழிலாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் டிரேட்ஸ் பணி நிபுணர்கள் ஆகியோர், தங்கள் துறைகளில் வெளிநாடுகளிலும் நியூசிலாந்திலும் சம்பந்தப்பட்ட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட ஊதிய அளவுகோலை பூர்த்தி செய்ய வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து காலாண்டுகளில் மூன்றில், நியூசிலாந்து எதிர்மறை பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல கொள்கைகளை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் குடியேற்ற விகிதம் நேர்மறையாக இருந்தாலும், 2022ஆம் ஆண்டு எல்லைகள் திறக்கப்பட்ட பின் ஏற்பட்ட அதிகபட்ச நிலைமை தற்போது குறைந்து வருகிறது. அதே சமயம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு பல நியூசிலாந்தர்கள் வெளிநாடு செல்லத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், அரசின் கூட்டணி கட்சியான “நியூசிலாந்து ஃபர்ஸ்ட்” (New Zealand First) இந்தக் கொள்கையை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|