Home>உலகம்>நோபல் பரிசு - மூன்று...
உலகம்

நோபல் பரிசு - மூன்று விஞ்ஞானிகளுக்கு கௌரவம்

byKirthiga|about 1 month ago
நோபல் பரிசு - மூன்று விஞ்ஞானிகளுக்கு கௌரவம்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது

புற்றுநோய் மற்றும் தன்னைத்தானே தாக்கும் நோய்களுக்கு புதிய சிகிச்சை வழிகளைத் திறந்த கண்டுபிடிப்பு

2025 ஆம் ஆண்டிற்கான உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மரி பிரங்கோ (Mary Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), மற்றும் ஜப்பானைச் சேர்ந்த சிமோன் சககுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் “நோய் எதிர்ப்பு அமைப்பின் புறத்தடுப்பு சகிப்புத்தன்மை” (Peripheral Immune Tolerance) குறித்த அவர்களின் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் (Karolinska Institute) மருத்துவ பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்படும் இந்த பரிசு, ஆண்டுதோறும் நோய் எதிர்ப்பு அமைப்பை, அதன் செயல்பாடுகளை மற்றும் மருத்துவ முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கிறது.

இந்த ஆண்டு பரிசு, “நமது உடல் நோய் எதிர்ப்பு அமைப்பு எப்படி நம்மை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பாற்றி, அதே நேரத்தில் தன்னைத்தானே தாக்காமல் கட்டுப்பாட்டில் வைக்கிறது” என்பதை விளக்கும் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் மேரி வாரென்-ஹெர்லேனியஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் மருத்துவத் துறையில் ஒரு புதிய ஆராய்ச்சி துறைக்கு அடித்தளம் அமைத்ததோடு, புற்றுநோய் மற்றும் தன்னைத்தானே தாக்கும் நோய்களுக்கு (Autoimmune Diseases) புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க வழிவகுத்துள்ளதாகவும் நோபல் குழு தெரிவித்துள்ளது.

பரிசு வெற்றியாளர்கள் ஸ்வீடன் மன்னர் வழங்கும் தங்கப் பதக்கம் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோன் (சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத் தொகையைப் பெறுவார்கள்.

நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. இவை டைனமைட்டை கண்டுபிடித்த ஸ்வீடிஷ் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் உருவாக்கிய விருப்பச்சாசனத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டவை. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதிக்காக வழங்கப்படும் இப்பரிசுகள் உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

கடந்த வருடம், அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ரூவ்குன் ஆகியோருக்கு மைக்ரோஆர்என்ஏ (microRNA) குறித்த அவர்களின் ஆராய்ச்சிக்காக மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சம்பிரதாயப்படி, ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் மருத்துவத்திலிருந்து தொடங்குகின்றன. இதைத் தொடர்ந்து இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

டிசம்பர் 10 ஆம் திகதி, ஆல்பிரட் நோபலின் மறைவு நாளன்று, ஸ்வீடன் மற்றும் நோர்வே அரசகுடும்ப உறுப்பினர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட விழாவில் இப்பரிசுகள் வழங்கப்படுகின்றன.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்