நீரிழிவு நோயால் 1 இலட்சம் பேர் இலங்கையில் பாதிப்பு
கால் புண்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை
இலங்கையில் 1 இலட்சம் பேர் நீரிழிவு கால் புண்களால் அவதிப்படுகின்றனர் – SLMA அதிர்ச்சி தகவல்
இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) வெளியிட்ட அதிர்ச்சி தகவலின்படி, தற்போது நாட்டில் சுமார் 1 இலட்சம் பேர் நீரிழிவு கால் புண்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கொழும்பு தேசிய மருத்துவமனை இரத்த நாள நிபுணரும் அறுவை சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் ரெஸ்னி காஸிம் தெரிவித்ததாவது, “நீரிழிவு நோயாளிகளின் காயங்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை” என கூறினார்.
அவர் மேலும் விளக்குகையில், “ஒரு நீரிழிவு நோயாளியின் காலில் சிறிய காயம் ஏற்பட்டால்கூட அது மிகுந்த சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இது பெரும்பாலும் பாதம் துண்டிக்கப்படுவதற்கான காரணமாக மாறுகிறது. ஒரு காலைக் கொழுத்தும் நிலை ஏற்பட்டால், மூன்று ஆண்டுக்குள் மற்றொரு கால் இழக்கும் வாய்ப்பு 30 சதவீதம் உள்ளது,” என்றார்.
மேலும், “நீரிழிவு நோயாளிகளில் சுமார் 20% பேருக்கு இத்தகைய புண்கள் உருவாகும் அபாயம் உள்ளது. இவற்றில் 85 முதல் 90 சதவீதம் வரை பாதத்தில் தோன்றும் சிறிய காயங்களிலிருந்தே தொடங்குகிறது. இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாதது, நரம்புகள் செயலிழப்பது, உடலில் கால்சியம் சேர்வது போன்றவை இதற்குக் காரணம். தற்போது இலங்கையில் சுமார் 20 இலட்சம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 40,000 புதிய கால் புண்கள் உருவாகின்றன. இதனால் ஏற்கனவே 1 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறினார்.
புற்றுநோயுடன் ஒப்பிடுகையில், நீரிழிவு கால் புண்களின் ஆபத்து மிக அதிகம் எனவும் பேராசிரியர் காஸிம் குறிப்பிட்டார். “புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30% பேர் ஒரு ஆண்டுக்குள் இறக்கின்றனர். ஆனால் எங்களது மருத்துவ பிரிவில், நீரிழிவு காரணமாக கால் துண்டிக்கப்பட்ட நோயாளிகளில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 35% பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் இறந்துவிடுகின்றனர்,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “நீரிழிவு காரணமாக ஒரு காலைக் கொழுத்துவோர், மூன்று ஆண்டுக்குள் மற்றொரு காலையும் இழக்கும் வாய்ப்பு 30% ஆகும். ஐந்து ஆண்டுகளில் இது 66% ஆக அதிகரிக்கும். இதை புற்றுநோயுடன் ஒப்பிடும்போது, முட்டை உறிப்பு (ovarian) மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தவிர மற்ற எல்லா புற்றுநோய்களும் இதைவிட குறைவான ஆபத்துடையவையாகும்,” என எச்சரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|