அசைவ உணவு தடை: பாலிதானா உலக சாதனை
உலகின் முதல் 'பியூர் வெஜ்' நகரம் – பாலிதானா
அசைவமில்லா வாழ்வியல் – பாலிதானாவின் வரலாறு
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாலிதானா (Palitana), உலகின் முதல் சட்டபூர்வ சைவ நகரமாக 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இங்கு இறைச்சி, மீன், முட்டை போன்ற எந்தவொரு அசைவ உணவுகளும் விற்கப்படுவதும், சமைக்கப்படுவதும், உட்கொள்ளப்படுவதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஜைன மதத்தின் ஆன்மிக தலம்
பாலிதானா, ஜைனர்களின் முக்கிய யாத்திரை தலமாகும். நகரத்தை ஒட்டியுள்ள ஒரு மலையில் 900-க்கும் மேற்பட்ட அழகிய கோவில்கள் அமைந்துள்ளன. அஹிம்சை (வன்முறையற்ற வாழ்க்கை) என்பது ஜைன மதத்தின் அடிப்படை கொள்கை என்பதால், உயிரினங்களை கொல்வது, சாப்பிடுவது போன்றவை இங்கு கடுமையாக தவிர்க்கப்படுகின்றன. இங்கு வாழும் ஜைனர்கள், விலங்குகளை மட்டும் அல்லாமல், நிலத்தடியில் வளரும் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சாப்பிடுவதில்லை.
அசைவ தடை எப்படி அமுல்ப்படுத்தப்பட்டது?
2014 ஆம் ஆண்டு, சுமார் 200 ஜைன துறவிகள் 250 இறைச்சிக் கடைகளை மூடவும், நகரத்தை முழுமையாக இறைச்சியற்ற மண்டலமாக அறிவிக்கவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நீண்டநாள் தொடர்ந்ததைத் தொடர்ந்து, குஜராத் அரசு பாலிதானாவில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனையைத் தடைசெய்து, அதை 100% சைவ நகரமாக அறிவித்தது.
சட்டத்தின் அமல்பாடு
இன்று, பாலிதானாவில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லை. இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பது மட்டுமல்லாமல், அவற்றை நகர எல்லைக்குள் கொண்டு வருவதும் சட்டவிரோதமாகும். இந்த சட்டத்தை மீறுவோருக்கு அபராதமும், சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
சிறப்பு உணவுப் பழக்கவழக்கம்
பாலிதானா மக்கள் பால், நெய், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உட்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், எந்தவிதமான விலங்கு இறைச்சி அல்லது கடல் உணவுகளும் நகரின் உணவு கலாச்சாரத்தில் இடம்பிடிக்கவில்லை.
உலகளாவிய கவனம்
இஸ்ரேலின் டெல் அவிவ் 'Vegan Capital of the World' என்று அறியப்படுவது போல, இந்தியாவின் சைவத் தலைநகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது பாலிதானா. உலகம் முழுவதும் இருந்து பலரும், ஆன்மிக அமைதிக்காகவும், சைவ வாழ்க்கை முறையை அனுபவிப்பதற்காகவும், இந்த நகரத்தைப் பார்வையிடுகின்றனர்.