Home>உலகம்>பிலிப்பைன்ஸ் தென்கிழ...
உலகம்

பிலிப்பைன்ஸ் தென்கிழக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

byKirthiga|29 days ago
பிலிப்பைன்ஸ் தென்கிழக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை வெளியீடு

7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின் சுனாமி எச்சரிக்கை – மக்கள் வெளியேறுமாறு அறிவிப்பு

பிலிப்பைன்ஸின் தென்கிழக்குக் கடற்கரை பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அப்பகுதிக்கான சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் மிண்டனாவோ தீவின் கிழக்குக் கடல்பகுதியில், தலைநகரான தவாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் தொலைவில், 58.1 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை உடனடி சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் (Phivolcs) இந்த நிலநடுக்கத்தின் அளவை 7.6 ரிக்டராக பதிவு செய்துள்ளது. மேலும், “அழிவை ஏற்படுத்தக்கூடிய சுனாமி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

உயிருக்கு ஆபத்தான அலைகள் எழலாம்” எனக் கூறி, பிலிப்பைன்ஸ் கிழக்கு மற்றும் தென் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பும் 1 முதல் 3 மீட்டர் உயரமுடைய அலைகள் பிலிப்பைன்ஸ் சில கடலோரங்களில் உருவாகலாம் என்றும், இந்தோனேசியா மற்றும் பலாவ் தீவுகளில் 30 செ.மீ முதல் 1 மீட்டர் உயரம் வரையிலான அலைகள் உருவாகக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் நாடு "ரிங் ஆஃப் ஃபயர்" எனப்படும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள 40,000 கிலோமீட்டர் நீளமான நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது.

உலகின் பாதிக்குமேற்பட்ட எரிமலைகள் இம்மண்டலத்திலேயே காணப்படுவதுடன், இப்பகுதியில் அடிக்கடி பலத்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்