இணையம் இன்றி வாட்ஸ்அப் அழைப்பு - பிக்சல் 10
இணையம் இல்லாமலே வாட்ஸ்அப் அழைப்பு - பிக்சல் 10 அறிமுகம்
செயற்கைக்கோள் உதவியுடன் வாட்ஸ்அப் அழைப்பை சாத்தியமாக்கும் கூகிள் பிக்சல் 10
உலகளாவிய தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவிப்பை கூகிள் வெளியிட்டுள்ளது.
இதுவரை வாட்ஸ்அப் பயன்பாடு முழுமையாக இணைய வசதியை மட்டுமே சார்ந்திருந்த நிலையில், இனி இணையம் இல்லாமலேயே வாட்ஸ்அப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் 2015 ஆம் ஆண்டில் குரல் அழைப்பு வசதியும், 2018 ஆம் ஆண்டில் வீடியோ அழைப்பு வசதியும் அறிமுகமானது. ஆனால் இரண்டும் இணையம் இருந்தாலே மட்டுமே சாத்தியம்.
தற்போது கூகிள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 10 தொடரில், செயற்கைக்கோள் (Satellite) இணைப்பை பயன்படுத்தி, நெட்வொர்க் இல்லாத இடத்திலும் வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை வழங்குகிறது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட பிக்சல் 10 தொடரில், இந்த அதிநவீன அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மலைப் பகுதிகள், கடல் பயணங்கள் அல்லது நெட்வொர்க் வசதி இல்லாத எந்த இடத்திலும், செயற்கைக்கோள் உதவியுடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
கூகிள் தெரிவித்ததாவது, வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வரும் என்றும், நெட்வொர்க் இல்லாமல் வாட்ஸ்அப் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என பிக்சல் 10 தொடரை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில், வாட்ஸ்அப் பயனர்கள் மட்டுமல்லாமல், முழு மொபைல் துறையே பெரும் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
எதிர்காலத்தில், இணைய வசதியில்லாமல் செயற்கைக்கோள் வழியாக இயங்கும் பல்வேறு செயலிகள் வெளிவரக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் |
|---|