Home>இந்தியா>குடியரசுத் தலைவர் தி...
இந்தியா

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை தரிசனம்

byKirthiga|16 days ago
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை தரிசனம்

குடியரசுத் தலைவர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்தார் – பாதுகாப்பு தீவிரம்

ஐயனை தரிசிக்க சபரிமலை சென்ற குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று தரிசனம் செய்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக கேரள மாநிலத்திற்கு வந்துள்ள அவர், பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்த பிறகு, விமானப்படை ஹெலிகாப்டரில் பத்தனம்திட்டா மாவட்டத்தின் பம்பை பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து பம்பை கணபதி கோயிலில் சிறப்பு பூஜை செய்து, பின்னர் சபரிமலைக்கு சென்றுள்ளார்.

இருமுடி கட்டிய பின், சன்னிதானத்திற்கு சிறப்பு வாகனத்தில் பயணம் செய்த அவர், 18 படியை ஏறிச் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தார்.

அவரது வருகையையொட்டி சபரிமலை கோயில் சுற்றுவட்டாரத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு துறையினர், காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து முழு பகுதியையும் கண்காணித்தனர்.

திரௌபதி முர்மு தனது கேரள பயணத்தின் போது சபரிமலை தரிசனத்துடன் சேர்த்து திருவனந்தபுரம் ராஜ்பவனில் முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிலை திறப்பு விழா, வர்க்கலா சிவகிரி மடத்தில் நடைபெறும் ஸ்ரீ நாராயணகுரு சமாதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்